கடந்த 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. இந்த போரில் உயிர் தியாகம் செய்தோர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த 30 சதவீதம் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசு சமீபத்தில் அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்து வரும் மோதலில், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை வங்கதேசம் அரசு அறிவித்துள்ளது. சட்ட - ஒழுங்கை நிலைநாட்ட ராணுவப் படைகளை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, தலைநகர் டக்கா முழுவதும் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளை அரசு குவித்துள்ளது.
இதனிடையே, வங்கதேசத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள், விடுதிகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் செய்து வருகிறது.
8,500 மாணவர்கள் உட்பட சுமார் 15,000 இந்தியர்கள் அங்கு வசித்து வருவதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 8,500 இந்திய மாணவர்களில், 405 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் அவசர உத்தரவு
இந்நிலையில், வங்காதேசத்தில் சிக்கி உள்ள தமிழகர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வங்காளதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கியிருப்பதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளன. வங்காளதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, உள்ளூர் பயணங்களைத் தவிர்க்கவும். அவர்கள் வசிக்கும் வளாகத்திற்கு வெளியே தங்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தை, வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் .மு.க.ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அங்குள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளை தொடர்பு கொண்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. வங்காளதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள். தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
*இந்தியாவிற்குள்- +91 1800 309 3793
*வெளிநாடு +91 80 6900 9900
*தொடர்புக்கு +91 80 6900 9901 " என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.