தமிழ்நாடு அரசு மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இல்லை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி

கருப்புக் கொடி காட்டுகிறார்கள். நான் அதை ஜீரணித்துக் கொள்கிறேன். ஆளுனரை அவர்கள் அவமரியாதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இல்லை என ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டார். கருப்புக் கொடி போராட்டம் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், ‘தி இந்து’ ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி விவரம் வருமாறு :

கேள்வி : மாநில அரசுக்கு இணையான ஒரு அரசை நீங்கள் நடத்துவதாக புகார் கூறப்படுகிறதே?

பதில் : எனது சுற்றுப் பயணங்களையொட்டி, சர்ச்சையை எழுப்புகிறார்கள். ஆனால் அவர்கள் அறியமாட்டார்கள்… ஆளுனர்தான் ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் என்று! அனைத்துத் துறைகளின் அனைத்து விதமான பில்களும் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு, இறுதியாக ஆளுனரின் முத்திரையைப் பெற வேண்டும். இது மிகப் பெரிய பொறுப்பு!

தமிழ்நாட்டின் கலாச்சாரம், புவியியல், ஆறுகள், தொழிற்சாலைகள், விவசாயிகள், வாழ்க்கை முறை குறித்து நான் அறிந்திருக்க வேண்டும் என கருதுகிறேன். நேரடியாக சென்று பார்க்காமல், இது சாத்தியமல்ல. எனது சந்திப்புகளில் முக்கிய துறைகளை சேர்ந்த 25 முதல் 30 அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். நான் அவர்களிடம் இருந்து நேரடியாக தகவல்களை பெறுகிறேன்.

நான் அவர்களை திட்டுவதில்லை, அவர்களிடம் தவறு கண்டு பிடிப்பதில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. பிறகு எப்படி நான் தலையீடு செய்ததாக கூற முடியும்?

கேள்வி : நீங்கள் உத்தரவு போடுவதில்லையா?

பதில் : ஒருபோதும் உத்தரவிடுவதில்லை. அவர்களை பாராட்டுகிறேன், உற்சாகப்படுத்துகிறேன். அவர்களின் வாழ்வும், பணியும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என ஆலோசனை கூறுகிறேன். அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வரச் சொல்கிறேன். ஃபைல்களை தேக்கமில்லாமல் பார்க்க கூறுகிறேன். கடவுள் மீது நம்பிக்கை வைக்கவும், ஊழல் இல்லாமல் இருக்கவும் கூறுகிறேன். தவறான வழியில் பெறப்படும் பணம், குடும்பத்திற்கு கெடுதலாக அமையும் என்பதை கூறுகிறேன்.

கேள்வி : எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக உங்களது மாவட்ட வாரியான சுற்றுப்பயணத்திற்கு எதிராக இருக்கிறது. அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தீர்களே?

பதில் : நான் அவரிடம் விளக்கினேன். அதை மாவட்ட ஆட்சியர்களிடமோ, காவல் கண்காணிப்பாளர்களிடமோ, எனது சந்திப்புகளில் இடம்பெற்ற சுமார் 300 இதர அதிகாரிகளிடமோ அதை அவர் சரிபார்த்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்கு அவர் தயாரில்லை. அவருக்கென சொந்தமான செயல் திட்டம் இருக்கிறது. அதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.

கேள்வி : ‘கே பேக் மோடி’க்கு பிறகு, இப்போது ‘கே பேக் கவர்னர்’ என்கிறார்களே?

பதில் : அது அவர்களின் வழக்கம்!என்னைத் திட்டுவதின் மூலமாக தங்களுக்கு அதிக மைலேஜ் கிடைப்பதாக நினைக்கிறார்கள். வாக்குகளை அதிகரித்துக்கொள்ள முடியும் என நினைக்கிறார்கள். இதில் அவர்கள் அளவுக்கு நான் செயல்பட முடியாது. ஒரு ஆளுனராக, எனது கவுரவத்தை நான் பேணியாக வேண்டும்.

கேள்வி : மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வதை இன்னும் தொடர இருக்கிறீர்களா?

பதில் : நிச்சயமாக! ஏன் நான் அதை செய்யக்கூடாது? முதல் அமைச்சர் அதை புரிந்து கொண்டிருக்கிறார். நான் செல்கிற இடங்களில் எல்லாம், அவர்கள் (எதிர்க்கட்சிகள்) கருப்புக் கொடி காட்டுகிறார்கள். நான் அதை ஜீரணித்துக் கொள்கிறேன். ஆளுனரை அவர்கள் அவமரியாதை செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கிரிமினல் குற்றம். அவர்களை கைது செய்ய முடியும். ஆனால் நான் அவர்களை அலட்சியப்படுத்தி விடுகிறேன்.

ஆளுனராக அஸ்ஸாமில் செயல்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தேன். அங்கு எனது பணி பாராட்டப்பட்டது.’

கேள்வி : தமிழ்நாடு ஆளுனராக நீங்கள் தேர்வு செய்யப்பட அதுதான் காரணமா?

பதில் : அப்படித்தான் தோன்றுகிறது. அஸ்ஸாமில் (மேகாலயா மாநில பொறுப்பு ஆளுனராகவும்) ஒன்றரை ஆண்டுகளில் என்னால் அதிகம் சாதிக்க முடிந்தது. நான் அவர்களை வழிநடத்தினேன். அவர்கள் விரும்பவில்லை என்றால், நான் கட்டாயப்படுத்த மாட்டேன். சொகுசான, வசதியான வாழ்க்கையுடன் காலத்தை போக்குவது எனது இயல்பு அல்ல.’

கேள்வி : ஒரு கல்வியாளராக இருக்கிறீர்கள். நீங்கள் வேந்தராக இருக்கும் தமிழக பல்கலைக்கழகங்களை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

பதில் : கல்வித் துறையை நான் புரிந்து கொள்கிறேன். கல்வி முறையுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். இங்குள்ள பல்கலைக்கழகங்களில், செயல் முறை இருக்கிறது. அதில் நான் அதிகம் செய்யவேண்டிய தேவையில்லை.’

கேள்வி : பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்திற்கான எதிர்வினை எப்படி இருக்கிறது?

பதில் : கடந்த 6 மாதங்களில் 5 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கல்வியாளர்களும், மீடியாவும் இதை வரவேற்கிறார்கள். ஒவ்வொருவரும் அந்த நியமனங்களை பாராட்டுகிறார்கள், சூரப்பா (அண்ணா பலகலைக்கழக துணைவேந்தர்) நியமனத்தை தவிர!

சூரப்பாவின் தகுதியை ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்கிறார்கள். அவர் இன்னொரு மாநிலத்தை சேர்ந்தவர் என விமர்சிக்கிறவர்களும்கூட, அவரது தகுதியை குறை கூறவில்லை. இந்த விஷயத்தில் மொத்தம் 145 விண்ணப்பங்கள் வந்தன. தேடுதல் குழுவினர் அதில் இருந்து 9 பேர் பட்டியல் ஒன்றை தயார் செய்தார்கள். அதில் இருந்து மூவரை எனக்கு அனுப்பினார்கள்.

நானும், எனது கூடுதல் தலைமைச் செயலாளரும் (ஆர்.ராஜகோபால்) மட்டுமே அந்த மூவரையும் நேர்காணம் செய்தோம். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பின்னணி மிக முக்கியம். எனவே எனக்கு வேறு ‘ஆப்ஷன்’ (சூரப்பா தேர்வை தவிர) இல்லை. இதர இருவரில் ஒருவர், கணிதவியலாளர்! இன்னொருவர், உயிர் வேதியலாளர்! எனவே இயற்கை நீதிப்படி தேர்வு செய்தோம்.

முழுக்க தகுதி அடிப்படையிலும் மனசாட்சி அடிப்படையிலும் நடந்த தேர்வு அது! நான் அதில் அநீதியுடன் செயல்பட்டிருந்தால், என் மனசாட்சி எப்படி அனுமதிக்கும்?

கேள்வி : அருப்புக்கோட்டையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற பாலியல் பிரச்னையை விசாரிக்க நீங்கள் ஏன் ஒரு நபர் குழுவை அமைத்தீர்கள்? அது பற்றி விவரிக்க ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினீர்கள்?

பதில் : ஆளுனராகவும், வேந்தராகவும் எனக்கு இரட்டைப் பொறுப்பு இருக்கிறது. ஒரு ஆளுனராக மாநில அமைச்சரவை என்னை வழி நடத்துகிறது. ஆனால் வேந்தராக, நான் சுப்ரீம் அத்தாரிட்டி! பத்திரிகையாளர் சந்திப்பு, நான் ஆளுனராகி 6 மாதங்கள் நிறைவு பெற்றதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. நானும் ஒரு பத்திரிகையாளன் என்ற அடிப்படையில் நாம் ஒரே சமூகம்!

கடந்த 40 ஆண்டுகளாக செய்தியாளர்களால் சூழப்பட்டிருந்தவன் நான். எனவே இதில் தவறு எதுவும் இல்லை. மேலும் அவர்கள் எதிர்பார்த்த இரண்டு, மூன்று விஷயங்களை நான் தெளிவுபடுத்தினேன்.’

கேள்வி : சந்தானம் குழு பற்றி?

பதில் : துணைவேந்தர் 5 பேர் அடங்கிய குழுவை அமைத்தார். பாரபட்சம் இல்லாத மூத்த அதிகாரி ஒருவர் விசாரிப்பது சரியாக இருக்கும் என முடிவு செய்தோம். தற்போது அவர் இரு பேராசிரியைகளை குழுவுக்கு பெற்றுக் கொண்டிருக்கிறார்.

கேள்வி : மாநில அரசு இதே பிரச்னையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இது குழப்பமாக இல்லையா?

பதில் : இல்லை. நான் வெளிப்படைத் தன்மையை விரும்புகிறவன்! நாங்கள் ஒரு நபர் குழுவின் அறிக்கையை அரசிடம் கொடுப்போம். அதில் மறைக்க ஒன்றுமில்லை.

கேள்வி : தமிழ்நாட்டில் தினமும் போராட்டங்கள் நடக்கின்றன. சட்டம் ஒழுங்கு இல்லாத சூழல் நிலவுவதாக கருதுகிறீர்களா?

பதில் : நான் அப்படி நினைக்கவில்லை. ஜனநாயகத்தில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த உரிமை இருக்கிறது.

கேள்வி : பொதுமக்கள் மனநிலையில், மாநில அரசு ஊழல் மயமாக பார்க்கப்படுகிறதே?

பதில் : அதற்கான எந்த ஆதாரமும் என்னிடம் வரவில்லை. நான் 6 மாதங்களாக இங்கு இருக்கிறேன். அடிப்படை இல்லாத புகார்கள் கூறப்படுகின்றன.

கேள்வி : தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை பார்க்க விரும்புகிறீர்களா?

பதில் : நிலையான அரசுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன்.

கேள்வி : எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த நேரமும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறதே?

பதில் : எனக்குத் தெரியும். அதை யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது. அரசமைப்புச் சட்டப்படி நான் செயல்படுவேன் என்கிற உறுதியை என்னால் தர முடியும். அதில் சமரசமில்லை. நான் இதில் இழப்பதற்கு எதுவுமில்லை.

இவ்வாறு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பேட்டி அளித்திருக்கிறார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close