தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், கோவையை தொடர்ந்து திருநெல்வேலியில் இன்று அதிகாரிகளை சுளுக்கெடுத்தார். நாளை கன்னியாகுமரியில் முகாமிடுகிறார்.
பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு ஆளுனராக நியமனம் பெற்று வந்தபோது அவரை ஓய்வுபெற்ற அரசியல்வாதியாக பார்த்தவர்கள்தான் அதிகம். ஆனால் ராஜ் பவனில் சில அதிரடிகளை ஆரம்பித்த அவர், இப்போது மாவட்டம் வாரியாக களமாட ஆரம்பித்திருக்கிறார்.
பன்வாரிலால் புரோஹித், கோயம்புத்தூரில் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க சென்ற இடத்தில் மத்திய அரசின் திட்டங்களை பார்வையிடுவதாகக் கூறி களத்தில் குதித்தார். அங்குள்ள ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகளையும், போலீஸ் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசித்தார்.
பன்வாரிலால் புரோஹித்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதற்கெல்லாம் அசராமல், ‘அரசியல் சட்டத்தில் அதிகாரிகளை அழைத்து ஆளுனர் ஆலோசனை நடத்த எந்தத் தடையும் இல்லை’ என தில்லாக சொன்னார். இதே ஆலோசனையை மாவட்ட வாரியாக செய்யப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார்.
பன்வாரிலால் புரோஹித்தின் 2-வது இன்னிங்ஸ் இன்று (டிசம்பர் 6) திருநெல்வேலியில் ஆரம்பமானது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த பன்வாரிலால் புரோஹித் அங்கே இருந்தது சிறிது நேரம்தான். திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த அவர் மத்திய அரசின் சுகாதார திட்டத்தை தொடங்கி வைத்தார். இன்று பிற்பகலில் பாளையங்கோட்டை, தெற்கு பஜார் லூர்துநாதன் சிலை அருகிலும் சுகாதார திட்டத்தை தொடங்கி வைத்தார் அவர்.
இன்று மாலை 4 மணிக்கு திருநெல்வேலி, வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் அரசு அதிகாரிகள், அரசு சாரா அமைப்புகள், அரசியல் கட்சியினர் என தன்னை சந்திக்க விரும்புகிற யாரையும் சந்தித்து குறைகளை கேட்டறிகிறார் கவர்னர்.
இன்று மாலையில் கன்னியாகுமரி சென்று தங்கும் பன்வாரிலால் புரோஹித், நாளை மாலை 4 மணிக்கு அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அரசியல் கட்சியினர், அரசு சாரா அமைப்புகளிடம் மனு பெறுகிறார். இது தொடர்பாக கன்னியாகுமரி ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்ட அறிக்கையில், ‘பொதுமக்கள் உள்பட யார் வேண்டுமானாலும் ஆளுனரிடம் மனு கொடுக்கலாம்’ என கூறியிருக்கிறார்.
முன்னதாக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் பன்வாரிலால் புரோஹித் வந்து இறங்கியது முதல் ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆளுனரின் நிகழ்ச்சி தொடர்பான பதற்றத்திலும் பரபரப்பிலும் மூழ்கியிருந்தனர். திருநெல்வேலியில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆளுனரின் நிகழ்ச்சிகளில் அவருடன் சென்று அவரது கேள்விகளுக்கு பதில் அளித்தபடி இருந்தார்.
பன்வாரிலால் புரோஹித் எங்கே திடீர் ஆய்வு நடத்துவாரோ, என்ன குறை சொல்வாரோ? என்கிற பதற்றத்தில் உடைந்த சாலைகளை சரி செய்வது, முக்கிய இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது என அதிகாரிகள் பம்பரமாக சுழல்கிறார்கள். ஆளுனரின் ஆய்வுக்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து ஆட்சியர்கள் அறிக்கை விடுவது தமிழகம் இதற்கு முன்பு கண்டிராத புதுமை!
இந்த நிகழ்ச்சிகளில் புதிதாக ஆளுனரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் ஆர்.ராஜகோபால் ஐஏஎஸ் உடன் செல்கிறார். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவருக்கு தமிழகத்தில் எங்கே என்ன பிரச்னை? ஐஏஎஸ், ஐபிஎஸ்.களை எப்படி வேலை வாங்க வேண்டும்? என அனைத்தும் அத்துபடி! அவரது துணையுடன், பன்வாரிலால் புரோஹித் கையில் லகான் சுழல்கிறது.