பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய ஆளுனர் : மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம்

பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர்.

பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர்.

தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் நேற்று (ஏப்ரல் 17) சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ராஜ் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். கல்லூரி மாணவிகளை பாலியல் வலையில் விரிக்க முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். காவிரி பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் விளக்கமளித்தார்.

ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தின் செய்தியாளர் சந்திப்பு நிறைவு பெற்ற சூழலில் ஆங்கில இதழியலாளர் லட்சுமி சுப்பிரமணியன் மேலும் ஒரு கேள்வியை எழுப்ப முயன்றார். அப்போது எழுந்துவிட்ட ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், தனது கையால் பத்திரிகையாளர் லட்சுமியின் கன்னத்தில் தட்டிவிட்டுச் சென்றார். இதற்கு பின்னர் ட்விட்டரில் லட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவுகளை வெளியிட்டார்.

பத்திரிகையாளர் லட்சுமியின் கண்டனப் பதிவை ‘டேக்’ செய்து தனது முகநூலில் பதிவிட்டிருக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல . அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையது அல்ல!’ என தனது கண்டனத்தை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், ‘நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவரை தொடுவது கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.’ என கூறியிருக்கிறார்.

பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் ஆளுனரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close