தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கமான பபாஸி தேர்தலில் பலரை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக கவிஞர், பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன் புகார் கூறியுள்ளார்.
தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கமான பபாஸி தேர்தல் சவேரியா ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், பலரை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “பபாஸி தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. வாக்களித்துவிட்டு வெளியேறினேன். வேட்புமனு தாக்கலின்போதே சிறு சிறுகாரணங்களைக் காட்டி வம்சி பதிப்பகம் ஷைலஜா, கண்ணதாசன் பதிப்பகம் முரளி கண்ணதாசன் உள்ளிட்ட பல வேட்பாளரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இன்று வாக்களிக்க வந்த எதிர் வெளியீடு உள்ளிட்ட சில உறுப்பினர்களும் உப்புப் பெறாத காரணங்களைக் காட்டி வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டனர். 300 வாக்குகளைக்கொண்ட ஒரு தேர்தலில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் சிலரையே வாக்களிக்கவிடாமல் தடுப்பது சிலருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதாகும். இதை எதிர்த்தும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் காட்டப்படும் பாரபட்சம் குறித்தும் பபாசியின் நிதிவிவகாரங்கள் குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பினேன். சிலர் கூச்சல், குழப்பம் எழுப்பி என்னை பேசவிடாமல் தடுத்தனர். முற்போக்கான புரட்சிகர நூல்களை வெளியிடும் பதிப்பகத்தினர் சிலர் கள்ள மெளனத்துடன் அமர்ந்திருந்தனர். நியாய உணர்வுள்ளவர்கள் என்னோடு சேர்ந்து குரல் எழுப்பினர்.
நீண்ட பாரம்பரியம்கொண்ட பபாஸியின் நலன்கள் சிலரின் சுயநலத்திற்காக தொடர்ந்து பலியிடப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“