சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 48-வது புத்தக திருவிழா நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழா, வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த புத்தக திருவிழாவில், கடந்த சனிக்கிழமையன்று (டிச.4) நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. மேலும், இந்நிகழ்வில் பேசிய சீமான், முதலமைச்சர் ஸ்டாலினை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இச்சம்பவங்கள் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, புத்தக திருவிழாவை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி, இச்சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளித்தது.
அதில், சென்னை புத்தகக் காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான ‘நீராருங் கடலுடுத்த’ பாடல் பாடப்படாமல், புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடியதற்கும் தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும், சீமான் இன்றைய அரசியல் சார்ந்தும், தமிழ்நாடு அரசு, முதலமைச்சர், மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆகியோரை ஒருமையில் பேசியதற்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தது.
பபாசி நிர்வாகிகள் பேட்டி
இந்த நிலையில், இன்று திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பபாசி நிர்வாகிகள், சென்னை புத்தகக் கண்காட்சியில் அரசியல் பேசிய சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பபாசி தலைவர் சொக்கலிங்கம், "சீமான் மேடை ஏறுவதற்கு முன்பே, இது அரசியல் மேடை அல்ல, இலக்கிய மேடை, புத்தகங்கள் தொடர்பாக மட்டும் பேசுமாறு அறிவுறுத்தினேன். சீமானின் பேச்சுக்கு பபாசி கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. நீங்கள் அழைத்துவரும் நபர் அரசியல் பேசக் கூடாது என பதிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னையும், பதிப்பகத்தையும் முன்னிலைப்படுத்துவதற்கு புத்தகக் காட்சியை அந்த பதிப்பகம் பயன்படுத்தியுள்ளது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் விளக்கத்தைக் கேட்டு, அந்த பதிப்பகம் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் புத்தக வெளியீடுகளின் கட்டுப்பாடுகளை வரையறை செய்வோம். சீமானுக்கு கொள்கைகள் இருக்கும் ஆனால், இது பொதுவான மேடை, இங்கு பேசியதுதான் சிக்கல்.
48 வருடத்தில் நடக்காத ஒன்று இப்போது நடந்துள்ளது. புத்தக காட்சிக்கு விருந்தினராக வந்த சீமான் இதை எப்படி செய்யலாம்?. அவருடைய கண்ணியத்தை காக்கத் தவறிவிட்டார்." என்று கூறியுள்ளார்.
பபாசி பொதுச் செயலாளர் முருகன் பேசுகையில், "சிறப்பு விருந்தினராக வந்த சீமான், புத்தகம் பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும். புத்தக காட்சி பாதைக்கு நாங்கள் யார் பெயரை வேண்டுமானாலும் வைப்போம். இந்த விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகமும் உரிய மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த பதிப்பகம் திட்டமிட்டு இதனை நடத்தியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
சீமானை அழைத்து வந்த பதிப்பாளர் வேடியப்பன், தங்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை பபாசி நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.