சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கும், முதலமைச்சர் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய விதமாக பேசியதற்கும் பபாசி அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 48-வது புத்தக திருவிழா நடைபெறுகிறது. கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழா, வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த புத்தக திருவிழாவில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
மேலும் நிகழ்வில் பேசிய சீமான், முதலமைச்சர் ஸ்டாலினை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இச்சம்பவங்கள் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், புத்தக திருவிழாவை நடத்தும் பபாசி அமைப்பு, இச்சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
அதில், "தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 48 ஆவது சென்னை புத்தகக் காட்சியில் 9ஆம் நாள் நிகழ்வில் இன்று (04/01/2025) காலை சக்தி வை. கோவிந்தன் சிந்தனை அரங்கத்தில் பபாசின் உறுப்பினரான டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்திற்கு, புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் சீமான் அவர்களை வரவழைத்து புத்தகத்தை வெளியிட்டு இருந்தார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பதிப்பகங்களின் புத்தக வெளியீட்டிற்கு வழங்கப்படும் வழக்கமான நடைமுறை. அதன்படி அவர்களுக்கு புத்தக வெளியீட்டுகு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் அவர் இன்றைய அரசியல் சார்ந்தும், தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அவர்களையும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் ஒருமையிலும் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் பாடலையும் பாடியதற்கும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இன்று அவசர செயற்குழு கூடி டிஸ்கவரி புக் பேலஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சூழ்நிலை இந்த நிகழ்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனவே தனிப்பட்ட முறையில் டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய நிகழ்விற்கு பபாசிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.