பார் கவுன்சில் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நிறைவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் 201 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் 201 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் 2016 ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை நிர்வகிக்க தற்காலிக தலைவராக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் செயல்பட்டு வந்தார். மேலும், பார்கவுன்சில் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்களாக மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் மற்றும் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பார் கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தலை நடத்த உத்தரவிட்டது. அதன்படி இந்திய பார்கவுன்சில் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. இந்த தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி நியமிக்கப்பட்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‌மொத்தமுள்ள 90 ஆயிரம் வழக்கறிஞர்களில் 53 ஆயிரத்து 620 வழக்கறிஞர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என கடந்த மாதம் 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 169 வாக்குப்பதிவு மையங்கள் மூலமாக தேர்தல் வாக்குபதிவு நடைபெறும். வரும் மார்ச் 28ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்காக கடந்த 1 ஆம் தேதி முதல் (பிப்ரவரி 01 ஆம் தேதி) வேட்பு மனு தொடங்கியது.

பிப்ரவரி 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் இன்றுடன் மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

மொத்தம் 201 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பிப்ரவரி 22 ஆம் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடை நாள் ஆகும்.

பின்னர் வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும்.

மார்ச் 01 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

மொத்தம் 25 உறுப்பினர்கள் பதவிக்கு 201 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

×Close
×Close