திருவல்லிக்கேணி பகுதியில் பார் ஒன்றில் தீபாவளியை முன்னிட்டு ரூ.1000-க்குமேல் மது அருந்துபவர்களுக்கு பரிசு உண்டு என அறிவித்த பார் உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தீபாவளிக்கு மது விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டு ரூ.350 கோடிக்கு இலக்கும் தீபாவளி அன்று மட்டும் ரூ.150 கோடிக்கு மது விற்பனைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இதைத் தீவிரமாக அமல்படுத்த மதுக்கடைகள், பார்கள் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் மதுப்பிரியர்களை கவர சட்டத்தை மீறிச் செயல்பட்டதால் பார் உரிமையாளர்கள் இருவரை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக பிரமுகர் முகமது அலி ஜின்னாவுக்கு சொந்தமான தனியார் ஹோட்டல் மற்றும் மதுபார் ஒன்றில் மது அருந்தும் குடிமகன்களைக் கவர ஒரு விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதில், ரூபாய் 1000க்கு மேல் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் 32 இன்ச் கலர் டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் ஆகியவை பரிசாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டு உள்ளனர். பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்த இந்த பேனர் குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக புகாரின் மீது வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார் பார் மேலாளர் வின்சென்ட் ராஜ், உரிமையாளர் ரியாஸ் அஹமத் ஆகியோரைக் கைது செய்தனர்.
பாரிலிருந்து கைப்பற்றப்பட்ட எல்.இ.டி. டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் ஆகியவை ஸ்டேஷனுக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.