கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் கடந்த சில நாள்களாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடை கடந்த சில தினங்களுக்கு முன்பு நீக்கப்பட்டது. இந்த நிலையில், கன்னியாகுமரி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது.
இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை பற்றி அறியாமல் பல்வேறு இடங்களில் இருந்தும் இன்று சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
அவர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிந்ததும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தற்போது திற்பரப்பு அருவியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வானிலை ஆய்வு மையம்
இதற்கிடையில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.
இதனால் வரும் நாள்களிலும் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“