சென்னை பனையூரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீட்டுக்கு வெளியே அண்மையில் அமைக்கப்பட்ட 55 அடி உயர கொடிக் கம்பத்தை கானத்தூர் காவல்துறை அகற்றியதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறைக்கு நன்றி சொல்ல வேண்டும். அவ்வாறு கம்பம் அகற்றப்படாமல் இருந்திருந்தால் கழிவுநீர் ஓடை சேதமடைந்து அண்ணாமலையின் வீட்டுக்குள் சென்றிருக்கும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
அக்டோபர் 21, 2023 அன்று காவல்துறை கொடிக் கம்பத்தை அகற்றிய போது தகராறில் ஈடுபட்டதாக பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, "இந்த வழக்கின் முழுப் பிரச்சினையையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 10 அடி உயரமுள்ள ஒரு கம்பம் என்பதே சாதாரண மனிதனுக்கு பெரியதாக தோன்றும். 55 அடி உயர கம்பமாக இருந்தால் அந்த உயரத்தை யாராலும் பார்க்க முடியாது. இவ்வளவு உயரமான கொடி கம்பத்தை அமைப்பது, அமைப்பவர்களுக்கே கடினமாக இருக்கும். இவ்வளவு உயரமான கொடிக் கம்பம் அமைப்பதற்கு அடித்தளம் வலுவாக இருந்திருக்க வேண்டும்.
“55 அடி உயர கொடிக் கம்பத்திற்கு, தரையில் 5 அடிக்கு மேல் தோண்ட வேண்டும் என்பது எந்த ஒரு சாமானியனுக்கும் தெரியும். அப்படி செய்யும் போது நிலத்தடி மின்சார கேபிள்களை சேதப்படுத்தும். மேலும் அது கழிவுநீர் குழாய் லைனையும் சேதப்படுத்தியிருக்கும். இதன் பின் அந்த கழிவுநீர் யாருடைய வீட்டிற்கு முன் கம்பம் நடப்பட்டதோ அவரின் வீட்டிற்குள் சென்றிருக்கும்" என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, கொடிக் கம்பம் அகற்றும் போது போலீசாரின் வாகன கண்ணாடியை கலவரக்காரர்கள் சேதப்படுத்தியதாக கூடுதல் அரசு வக்கீல் ஆர்.முனியப்பராஜ் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிபதி, அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேருக்கு தலா ரூ.2000 இழப்பீட்டு தொகையாக வாகன உரிமையாளருக்கு வழங்க உத்தரவிட்டார். மேலும் 6 பேருக்கும் ஜாமின் வழங்கிய நீதிபதி 2 வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“