சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வருடாந்திர மாசி பங்குனி திருவிழா கடந்த பத்து நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. திருவிழா தொடக்கமாக கடந்த 11ஆம் தேதி கொடியேற்றமும், காப்பு கட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்தி என நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வில் காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம், அக்னி சட்டி, பரவை காவடி உள்ளிட்டவைகளை எடுத்து, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து முத்துமாரியம்மன் கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் செக்காலை சாலையில் உள்ள பஜார் பள்ளிவாசல் அருகே செல்லும் போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அங்கு இருந்த இஸ்லாமிய மக்கள், பக்தர்களுக்கு தண்ணீர் தெளித்து நனையச் செய்து அவர்களின் சிரமத்தை குறைக்க துணைநின்றனர். இச்செயல், மத எல்லைகளை கடந்து மனிதநேயத்தையும், மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் செயலாக இருந்தது.
இந்த நிகழ்வானது சமூக ஒற்றுமை மற்றும் மதச் சார்பின்மைக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.