மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி பசுக்குண்டர்களின் தாக்குதல்களும் காவல்துறை கைது நடவடிக்கைகளும் வட இந்தியாவில் மட்டுமே நடைபெற்றுவந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் தலை தூக்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில், மாட்டிறைச்சி வைத்திருப்போர்கள் மீது பசுக் குண்டர்கள் தொடங்கிய கும்பல் தாக்குதல்கள் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்ற பின்னரும் அது தொடர்கிறது.
வட இந்தியாவில் டெல்லி அருகே தாத்ரியில் தொடங்கிய இந்த தாக்குதல் முடிவில்லாமல் தொடர்ந்துவருகிறது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை தெரிவித்தும் இது நின்றபாடில்லை. இப்படியான தாக்குதல்கள் பெரும்பாலும் வட மாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முகம்மது பைசான் என்பவர், மாட்டிறைச்சி சூப் சாப்பிடும் போட்டோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவைப் பார்த்த சில இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த இளைஞர் நிர்மல் குமார் ஜூலை 12 ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களே, எங்கெங்கோ இருப்பவர்களை மாட்டுக்கறி சாப்பிட்டால் தாக்கும் உன் திமிர் கோவையில் உன் பகுதியில் இருக்கின்றோம். மாட்டுக்கறி அடிக்கடி சாப்பிடுவதை பதிவிடுகிறோம். மீண்டும் உனக்காக பதிவிடுகிறோம். வா தில் இருந்தால் வா..” என்று பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜூலை 23 ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், “மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்துக் கொள்வாயா? How is it? இந்து மத வெறியர்களே!” என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த மணி என்பவர் கோவை காவல் நிலையத்தில் நிர்மல் குமார் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், கோவை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாட்டிறைச்சி தொடர்பான தாக்குதல்களும் காவல்துறை கைது நடவடிக்கைகளும் வட மாநிலங்களில் மட்டுமே தலைவிரித்தாடி வந்த நிலையில், தற்போது தமிழத்தில் இது போன்ற சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன.
இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மைக்காலமாக பொதுவெளியிலும் சமூக வலை தளங்களிலும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களுக்காக அந்த கருத்துகளில் சமூக அமைதிக்கு எவ்வித நெருடலும் சீர்குலைவும் ஏற்படாத நிலையிலும் கூட காவல்துறையும் நீதித்துறையும் முன்னெடுக்கும் பக்க சார்பான நடவடிக்கைகள் தொடர்ந்து காண முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நிர்மல் குமார் 12 .07.2019 அன்று பதிவிட்ட ஒரு முகநூல் கருத்தை காவல் துறை 17.07.2019 அன்று வழங்கிய ஆர்ப்பாட்ட மறுப்பு குறிப்பாணையில் குறிப்பிட்டு இருக்கிறது. அதில் இந்துக்களை கொச்சைப்படுத்தியதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். அந்த பதிவில் இந்துக்களை கொச்சைப்படுத்தும் வார்த்தைகளோ நோக்கமோ இல்லாத போதும் காவல் துறை வலிய அந்த கருத்தை திணித்திருக்கிறது, 17.07.2019 அன்று காவல் துறைக்கு அந்த பதிவு தெரிந்திருந்தாலும் கூட 10 நாட்கள் கடந்து அந்த பதிவினால் சமூக அமைதிக்கு எந்த குந்தகமும், எந்த சம்பவங்களும் நடைபெறாத நிலையில் காவல் துறை இந்த வழக்கை பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பது யாருடைய அழுத்தம் காரணமாக என சந்தேகம் எழுகிறது.” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள கொளத்தூர் மணி, “பெரும்பான்மை மக்கள் நலன் வேண்டி இயக்கம் எடுக்கிற நம்மை தடை செய்ய நடவடிக்கை எடுக்க அவசரம் காட்டும் காவல்துறை - சமூக அமைதியை சீர்குலைக்கும் வன்முறையை பேச்சுகளுக்கு - வன்முறை நடவடிக்கைகளுக்கு - மத வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுவது இனி சாத்தியமில்லை என்ற ஒரு நெருக்கடியை நாம் உருவாக்கியாக ஆகவேண்டும்.” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.