scorecardresearch

சென்னை டு புதுவை பீர் பஸ்? புதுச்சேரி அரசுக்கு களங்கம்: அ.தி.மு.க புகார்

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ‘பீர் பஸ்’ சுற்றுலா பேருந்து விடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. புதுச்சேரி அரசு உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என அ.தி.மு.க வலியுறுத்தி உள்ளது.

Puducherry ADMK
Puducherry ADMK

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று (ஏப்ரல் 12) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “புதுச்சேரி மாநிலத்திலிருந்து சென்னைக்கு பீர் பஸ் விடப்படுவதாகவும் அதற்கு கட்டணமாக 3000 ரூபாய் வசூலிக்கப்படும் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

புதுச்சேரியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பீர் உள்ளிட்ட மதுபானங்களை சென்னை வரை தமிழக பகுதி வழியாக கொண்டு செல்வதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்குமா? அது மட்டுமில்லாமல் வழியில் வண்டியை நிறுத்தி தமிழகப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மது அருந்துவதற்கு தமிழக காவல்துறைதான் அனுமதி அளிக்குமா? நடைமுறைக்கு சிறிதும் ஒத்து வராத இது போன்ற பிரச்சனைகளை சிலர் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து புதுச்சேரி அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக தெரிகிறது.

இது சம்பந்தமாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களும் பொறுப்பற்ற முறையில் பொய்யான தகவலை பூதாகரமான முறையில் எடுத்துக் கூறி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளார். உண்மையில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு சுற்றுலா என்ற பெயரில் பீர்பஸ் விடுவதாக இருந்தால் அது தவறான ஒன்றாகும். அது போன்ற ஒரு நிலை இல்லாத போது ஏன் திட்டமிட்டு ஒரு சிலர் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற புரளிகளை கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை.

பொய்யான செய்திகளை கிளப்பி விட்டு அதன் மூலம் மக்களிடையே அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்ற விதத்தில் செயல்படும் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 தினங்களாக பீர்பஸ் சம்பந்தமாக வரும் செய்திகள் தவறு என்றால் உடனடியாக அரசு இந்த செய்தி தவறு என்று தெரிவித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் கலால் துறையின் அதிகாரியும், சுற்றுலா துறையின் இயக்குனரும் இந்த செய்தியில் உண்மை இல்லை என்றால் அதற்கு உரிய முறையில் மறுப்பு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் பொய் செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுவது நிறுத்தப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Beer bus to puducherry admk urges cm to take necessary action