சுஜித் இறந்த செய்தி அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் இது போல் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் சிக்கிக் கொள்வது இது முதன்முறையல்ல. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 குழந்தைகள் இதுபோல் ஆழ்துளை கிணறுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அதுதொடர்பான விபரங்கள்....
2009, பிப்ரவரி 22ஆம் தேதி தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் 6 வயது சிறுவனான மாயி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 30 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு மாயியை சடலமாகத் தான் மீட்க முடிந்தது.
2009, ஆகஸ்ட் 27ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டைச் சேர்ந்த 3 வயதான சிறுவன் கோபிநாத் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்தான்.
2011, செப்டம்பர் 8ம் தேதி நெல்லை மாவட்டத்திலுள்ள கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுதர்சன் உயிரிழந்தான்.
2013, ஏப்ரல் 28ம் தேதி கரூரில் 7 வயது சிறுமி முத்துலட்சுமி என்பவர் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். அவர் உயிருடன் மீட்கப்பட்டாலும், மருத்துவமனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2013, செப்டம்பர் 28ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புலவன்பாடியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயது சிறுமி தேவி, 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு மீட்கப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
2014, ஏப்ரல் 5ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் மதுமிதா என்ற 3 வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டு, மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2014ல் ஏப்ரல் 15ம் தேதி, திருவண்ணாமலையில் ஒன்றரை வயது சிறுவன் சுர்ஜித் 165 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். பின்னர் 45 அடி ஆழத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான்.
2015, ஏப்ரல் 13ம் தேதி, வேலூர் மாவட்டம் கூராம்பாடியில் 350 அடி ஆழத்தில் சிக்கிய இரண்டு வயதுக் குழந்தை தமிழரசன் பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவன் உயிரிழந்தான்.
2019 அக்டோபர் 25ம் தேதி, திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் இரண்டு வயதான சுஜித் 600 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். சுமார் 88 அடியில் சிக்கிக் கொண்ட அவரை, ஐந்து நாட்கள் மீட்புக் குழுவினர் கடுமையாக போராடியும் சடலமாகத்தான் மீட்க முடிந்தது.