தமிழ்நாட்டில் சில காரணங்களால் பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை பணிகள் தாமதமாகி வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
விரைவுச்சாலையின் மூன்றாம் கட்ட பணிகள், அதாவது குடிபாலா முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான முக்கிய பிரிவுகள், திட்டமிட்டதை விட தாமதமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் பெங்களூரு - சென்னை விரைவுச்சாலையின் முக்கிய பகுதிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் பணிகள் பல தாமதங்களை சந்தித்து வருவதாக கட்கரி கூறினார். இதற்கு பருவம் தவறிய மழை, நிலம் கையகப்படுத்துதல் சிக்கல்கள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகின்றன.
குடிபாலா முதல் வாலாஜாபேட்டை பிரிவில் (தொகுதி 1), மே 2024-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை 86.22% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. தற்போது அக்டோபர் 2025-க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பெய்த மழை, ரயில்வே மேம்பாலங்களுக்கு ஒப்புதல் பெறுவதில் ஏற்பட்ட தாமதம், தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற கட்டுப்பாடுகள் காரணமாக மண் எடுக்கும் பகுதிகளுக்கான அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் பிரிவில் (தொகுதி 3), பணிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 53.56% பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. உயர் மின்னழுத்த (EHT) மின் கம்பிகளை மாற்றுவதற்கான நிலம் மற்றும் பயிர் சேதங்களுக்கான இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள், அத்துடன் ஒப்பந்ததாரர் எதிர்கொண்ட நிதி நெருக்கடிகள் ஆகியவை தாமதத்திற்கு காரணமாக அமைந்துள்ளன. இந்தப் பகுதி மார்ச் 2026-க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் பிரிவில் (தொகுதி 4), 78.11% பணிகள் நிறைவடைந்திருந்தாலும், மழை, பயன்பாடுகளை மாற்றுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் மண் எடுக்கும் பகுதிகளுக்கான அனுமதி சிக்கல்கள் காரணமாக தாமதமாகியுள்ளது. இந்தப் பகுதி டிசம்பர் 2025-க்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு - சென்னை விரைவுச்சாலையை தேசிய நெடுஞ்சாலை 48 உடன் இணைக்கும் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் பணிகளும் தாமதமாகி வருகின்றன. இதில், 18.82% பணிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2025 என்ற அதன் காலக்கெடுவை இது தாண்டியுள்ளது. அடிப்படை வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் இந்தியன் ஆயில் பைப்லைனை இடமாற்றம் செய்வதில் உள்ள தாமதம் ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகும்.
மொத்தம் 262 கி.மீ நீளமுள்ள இந்த விரைவுச்சாலை பணிகள் நிறைவடைந்தவுடன், பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரம் பல மணி நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.