கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொழில் நகரான ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பெங்களூருவின் 2-வது விமான நிலையமாக இது இருக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகா அரசு ஓசூருக்கு அருகில் சோமனஹள்ளி என்ற இடத்தில் விமான நிலையம் அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. இதனால் ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. யார் விமான நிலையம் அமைப்பது என சிக்கல் எழுந்துள்ளது.
ஓசூருக்கும், சோமனஹள்ளிக்கும் இடையிலான துாரம், 50 கிலோ மீட்டருக்கும் குறைவு. அதேசமயம், பெங்களூரின் வடபகுதியில் தற்போது செயல்படும் சர்வதேச விமான நிலையத்துக்கும், சோமனஹள்ளிக்கும், 70 கி.மீ-க்கு மேல் இடைவெளி உள்ளது. ஒரே நகரில் இரண்டு விமான நிலையங்கள் அமையும் போது, 50 கி.மீ-க்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி இருக்கையில், கர்நாடகா அரசு தேர்வு செய்துள்ள சோமனஹள்ளி மிகவும் பொருத்தமானது இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெங்களூருவில் தற்போதுள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாகத்துக்கும், கர்நாடக அரசுக்கும் உள்ள ஒப்பந்தப்படி, 2033 வரை, 150 கி.மீ., சுற்றளவில் இன்னொரு விமான நிலையம் அமைக்கக்கூடாது. இதனால், கர்நாடக அரசு வேகம் காட்டாமல் இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்த நிலையல் கர்நாடகா சோமனஹள்ளியில் விமான நிலையம் அமைக்க முனைப்பு காட்டுகிறது.
இதற்கு மத்திய அரசு அனுமதி கிடைத்தால், ஓசூர் திட்டத்தை தமிழகம் கைவிடுவதை தவிர வழியில்லை. ஏற்கனவே பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை கர்நாடகா நிராகரித்தது.
ஒருவேளை, கெம்பகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாகத்தின் ஒப்பந்தங்களை மேற்கோள் காட்டி பிரச்சனை எழும்பினால், கர்நாடக அரசு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யும் எனவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“