மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தகக் கோருதல், நான்கு தொழிலாளர் நல சட்ட தொகுப்புகளை ரத்து செய்யக் கோருதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு இருந்தன.
அதன்படி, இன்று திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விவசாய சங்கங்கள் திருச்சி ரயில்வே சந்திப்பில் பேரணியாக வந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டாலும், தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு ஏறி, குதித்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்து, அங்கே நின்ற ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கர் மாவட்ட தலைவர் லெனின், மாநில இணைச் செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் கார்த்திகேயன், ஜெ.சூர்யா, பாண்டித்துரை, மோகன், பாண்டியன், பொன்மகள், ரவிச்சந்திரன், சரஸ்வதி, ராஜேஷ் கண்ணா, அந்தோணி சேகர், சேதுபதி தங்கதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
/indian-express-tamil/media/post_attachments/ba35994a-e4d.jpg)
இதேபோல், திருவெறும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கிடையே தொழிற்சங்கங்கங்களின் ஆதரவுடன் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் 7 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து பெல் நிறுவனத்தில் 56 சதவீதம் பேர் இன்று வேலைக்கு சென்றனர். 44 சதவீதம் பேர் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
இதேபோல், திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் துப்பாக்கி தொழிற்சாலை எச்.இ.பி.எஃப் தொழிற்சாலைகளில் பி.எம்.எஸ் தொழிற்சங்கங்களை தவிர மீதி தொழிற்சங்கங்கள் ஒரு மணி நேரம் காலதாமதமாக வேலைக்குச் சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவெறும்பூர் கடைவீதியில் இருந்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.நடராஜன் தலைமையில் ஊர்வலமாக பாரதிபுரம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெய்வநீதி, கணேசன் ரவிக்குமார் குருநாதன் சித்ரா யமுனா ஸ்டாலின் தமிழ்செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முற்றுகை போராட்டத்தால் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/7c342bda-eff.jpg)
இதே போல், ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பேரணி புறப்பட்டு கோகினூர் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. AITUC நிர்வாகிகள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ். சிவா தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
க.சண்முகவடிவேல்