இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய ஜவுளிகளை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் விதமாக டெல்லியில் நடைபெற உள்ள 2025க்கான ஜவுளி கண்காட்சியின் முன்னோட்ட ("ரோட் ஷோ") நிகழ்வு கோவையில் கடந்த 4-ம் தேதி நடைபெற்றது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஆதரவோடு 12 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்கள் (Export Promotion Councils (EPCs) இணைந்து இந்தியாவை சர்வதேச ஜவுளி சந்தையில் முன்னணியில் கொண்டு செல்லும் நோக்கோடு "பாரத் டெக்ஸ் 2025" என்ற உலகலாவிய ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சி வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை புது தில்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் நொய்டாவில் உள்ள இந்திய எக்ஸ்போ சென்டர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்திய ஜவுளித்துறையின் சிறப்பையும், திறனையும் கொண்டாடும் வகையிலும் இந்திய ஜவுளி உற்பத்திகளை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த கண்காட்சி நடத்த உள்ளது.
மேலும் இந்த கண்காட்சியில் உலகெங்கிலும் உள்ள தொழில்துறை தலைவர்கள், வடிவமைப்பாளர்கள், பிரதிநிதிகள், வாங்குவோர் மற்றும் ஜவுளி ஆர்வலர்கள் ஆகியோர் ஒன்றினைய உள்ளதால் "பாரத் டெக்ஸ் 2025" ஜவுளி துறையில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்நிலையில் இந்த நிகழ்விற்கான (ரோட் ஷோ) முன்னோட்ட நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் கோவை , திருப்பூர் ,கரூர், ஈரோட்டை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். டெல்லியில் நடக்கும் கண்காட்சியில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்க கட்டணங்களை குறைக்க வேண்டும். விசைத்தறி மானியம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய ஜவுளித்துறை செயலாளர் ரச்சனா ஷா கூறியதாவது, டெக்ஸ்டைல் துறையை சார்ந்த அனைவரையும் அழைத்து வருவதால் அனைத்து பொருட்கள் வாங்க கூடிய ஒரு சந்தையாக இந்தியா இருக்கும். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு அனைவரும் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாரத் டெக்ஸ் இணைத் தலைவர் பத்ரேஷ் தோஹியா, மத்திய ஜவுளித்துறை செயலாளர் ரச்சனா ஷா, மத்திய ஜவுளித்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சக்ஸேனா, தமிழக தொழில்துறை செயலாளர் அருண் ராய், SIMA துணைத் தலைவர் துரை பழனிசாமி, மேலும் மத்திய மற்றும் மாநில ஜவுளித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“