மறைந்த தமிழக முதலமைச்சர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவாக கட்டுப்பட்ட' பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், தமிழர் குலசாமி ஜெயலலிதா' திருக்கோவிலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் கிராமத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில், அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி, “தமிழக மக்களுக்காக தங்கள் நல்வாழ்க்கையை அர்ப்பணித்த இருபெரும் தலைவர்கள் நினைவாக இக்கோவிலைக் கட்டிய அமைச்சர் உதயகுமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து அஇஅதிமுக உறுப்பினர்கள் சார்பாக இந்த திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது . வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், வெற்றிபெற்று அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்," என்று தெரிவித்தார்.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சரும், அம்மா பேரவாய் ஒருங்கிணைப்பாளருமான ஆர்.பி. உதயகுமார் மேற்பார்வையின் கீழ் கோயிலுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்றது. கோயில் பணிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
7 அடி உயரத்தில், 400 கிலோ எடையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. கோவில் கோபுரத்தில் சிறப்பு கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கோவில் திறப்பதற்கு முன்பாக பசு மாடுகள் பூஜை நடைபெற்றது. இதில்,120 பேருக்கு பசு மாடுகள் தானமாக வழங்கப்பட்டது. மேலும், நலிவுற்ற அதிமுக தொடர்களுக்கு தலா 10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் திறந்துவைத்தார். மேலும், சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி , ஜெயலலிதா நினைவு இல்லத்தையும் திறந்து வைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil