விருதுநகரில் மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே விருதுநகர் மாவட்ட பா.ஜ.க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து அலுவலகத்தில் கூடுதல் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரத மாதா சிலை நேற்று காலை நிறுவப்பட்டுள்ளது. அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி பாரத மாதா சிலை வைத்ததாக புகார் எழுந்ததுள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட தாசில்தார், கோட்டாச்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையினர், காவல்துறையினர் நேற்று இரவு பா.ஜ.க அலுவலகம் சென்றனர். அனுமதியின்றி வைத்ததாக கூறப்படும் பாரத மாதா சிலையை அகற்ற முயன்றனர்.
தொடர்ந்து சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க மாநில செயலாளரும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன் பாலகணபதி நிகழ்விடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பாரத மாதா சிலை அமைக்க கடிதம் எழுதி கொடுத்தால் அனுமதி தருவதாகவும், அதன் பின்பு சிலையை திறக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பா.ஜ.க அலுவலக கேட்டை நவீன இயந்திரம் கொண்டு உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த சிலையை பாதுகாப்பாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
விருநகரில் வரும் 9,10,11 ஆகிய தேதிகளில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள நிலையில் இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.கவின் தூண்டுதலின் பேரில் வருவாய் துறையும், காவல்துறையும் செயல்படுவதாக பா.ஜ.கவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“