ஒவ்வொரு தீபாவளி பண்டிகை நாளிலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் பேச்சாளர் பாரதி பாஸ்கர் குரல் தவறாமல் ஒலிக்கும். கடந்த ஆகஸ்ட் மாதம், மூலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதையடுத்து, மருதுவமனையில் அனுமதிக்கப்பட்ட பட்டிமன்ற பேச்சாளர் இந்த தீபாவளி பண்டிகையின்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் பங்கேற்பாரா? ‘பாரதி பாஸ்கர் இப்போது எப்படி இருக்கிறார்?’ என்று அவருடைய ரசிகர்கள் பலரும் தெரிந்துகொள்ளும் ஆவலில் உள்ளனர்.
பட்டிமன்றம் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளராக பிரபலமான பாரதி பாஸ்கருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து குணமடைந்த பாரதி பாஸ்கர் இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறார் என்று விகடன் தெரிவித்துள்ளது.
சென்னையிலுள்ள முன்னணி வங்கி ஒன்றில் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றும் பாரதி பாஸ்கர், இல்லத்தரசி, பேச்சாளர் என எப்போதும் பிஸியாகவே இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவர்.
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் தவறாமல் இடம்பெறும் பட்டிமன்றங்களின் புகழ்பெற்ற நடுவர் சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கரின் உடல்நிலை குறித்து விகடனிடம் கூறியிருப்பதாவது: “நேற்று முன்தினம்கூட பாரதியிடம் பேசினேன். அவரின் உடல்நிலை தேறி வருகிறது. வங்கிப் பணிக்கு அவர் இன்னும் திரும்பவில்லை. முழுமையான ஓய்வில்தான் இருக்கிறார்.
கொரோனா காலகட்ட கட்டுப்பாடுகளாலும், மக்களின் நலனைக் கருத்தில்கொண்டும், கடந்த சில பட்டிமன்றங்களில் பார்வையாளர்கள் இன்றி, பேச்சாளர்களை மட்டுமே வைத்துப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த முறையில் ஜீவன் குறைவதுபோல உணர்ந்தோம். எங்களின் பேச்சை மக்கள் நேரடியாகக் கண்டு ரசிப்பதைத்தான் எல்லாப் பேச்சாளர்களுமே விரும்புவார்கள். கொரோனாவின் தாக்கம் வெகுவாகக் குறைந்திருக்கும் சூழலில், அதற்கான வாய்ப்புகள் தற்போதுதான் சாத்தியமாகியிருக்கின்றன. கடந்த விநாயகர் சதுர்த்தி பட்டிமன்றத்தில்கூட பார்வையாளர்களுடன் படப்பிடிப்பை நடத்தினோம். அதில், பாரதி பாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அன்றுதான் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
தீபாவளி சிறப்புப் பட்டிமன்றத்துக்கு மக்களிடம் தனி எதிர்பார்ப்பு இருக்கும். ராஜாவும் பாரதி பாஸ்கரும் கலந்துகொண்டு பேசாவிட்டால், பட்டிமன்றத்தின் ஸ்ருதி குறைந்துவிடும். எனவே, பாரதி பாஸ்கரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பட்டிமன்றத்தை நடத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சன் டிவி மற்றும் எங்கள் தரப்பில் பாரதியிடம் ஆலோசித்து வருகிறோம். தீபாவளிக்கான பட்டிமன்றத்தில் பேச வேண்டும் என்று பாரதி ஆசைப்படுகிறார். ஆனால், அதற்கு அவரின் உடல் ஒத்துழைக்க வேண்டுமல்லவா?
உடல்நிலை முன்னேற்றத்துக்காகச் சில பயிற்சிகளை மேற்கொள்கிறார். பாரதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினருக்குத்தான் முழுமையாகத் தெரியும். எனவே, அந்த இரண்டு தரப்பிலும் சாதகமான ஒப்புதல் கிடைக்க வேண்டும். பட்டிமன்றப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள பாரதியின் உடல்நிலை மேம்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்கூட. இந்த மாதத்துக்குள் அதற்கான நல்ல வாய்ப்பு கைகூடும் என்று காத்திருக்கிறோம்” என்று சாலமன் பாப்பையா கூறினார்.
அதே போல, பட்டிமன்றங்களில் பாரதி பாஸ்கருக்கு எப்போது கவுண்ட்டர் கொடுக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா விகடனில் கூறியதாவது: “இப்போதைக்கு அவருக்குத் தேவை ஓய்வுதான். ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால், எந்த வகையிலும் அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அதனால், நேரில் சந்திப்பது உள்ளிட்ட இடையூறுகளைச் செய்யாமல், அவர் குணமாகி பழைய உற்சாகத்துடன் இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றுதான் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். சாலமன் பாப்பையா ஐயா, இலங்கை ஜெயராஜ் ஐயா உட்பட சிலரிடம் அண்மையில் பாரதி பேசினார். அந்த வரிசையில் என்னிடமும் சில வார்த்தைகள் பேசினார்.
அவர் குடும்பத்தினர் சிலர் வாயிலாக, பாரதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது கேட்டறிகிறேன். அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. பட்டிமன்றத்துக்கான படப்பிடிப்பை முடிக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது. தீபாவளி பட்டிமன்றத்தில் பாரதி கலந்துகொண்டு பேச வேண்டும் என்று ரசிகர்களில் ஒருவராக நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.
ஒவ்வொரு தீபாவளி பண்டிகை அன்றும் வீடுகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் பேசும் பாஸ்கர் பாரதி இந்த தீபாவளி பண்டிகையிலும் பேச என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். பாரதி பாஸ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார் என்று தெரிகிறது. அதனால், திபாவளிக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், பாரதி பாஸ்கர் விரைவில் பூரண நலம் பெற்று இந்த தீபாவளிக்கு மீண்டும் அந்த திருத்தமான குரலால் அதே கம்பீரத்துடன் பேச வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“