அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு அதைப் பற்றி பேசி வீடியோ வெளியிட்ட பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பாரதி பாஸ்கர் தங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என ரியாத் தமிழ் சங்கம் அறிவித்துள்ளது.
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர். இவர் தமிழகத்தில் மட்டுமல்லாமல், தமிழர்கள் வாழும் பிற மாநிலங்களிலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மத்தியிலும் பிரபலமானவர். இவருடைய பட்டிமன்றப் பேச்சுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவர் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் அங்குள்ள தமிழர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. அதில், பாரதி பாஸ்கர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு ஆதரவாகவும் கோயிலைப் போற்றியும் பேசியதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன. நெட்டிசன்கள் பாரதி பாஸ்கர் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இதனிடையே, சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் செயல்பட்டு வரும் ரியாத் தமிழ் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 2-ம் தேதி மாணவர் கலை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அழைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிகழ்ச்சியின் விளம்பரப் படத்தை பகிர்ந்து பேச்சாளர் பாரதி பாஸ்கரை விழா ஏற்பாட்டாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, ரியாத் தமிழ்ச் சங்கம், பாரதி பாஸ்கர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் வர முடியாமல் போனமையால் ரியாத் தமிழ்ச் சங்கம் வேறு சில தமிழ் ஆளுமைகளை வைத்து குறிப்பிடப்பட்ட இடத்தில், நேரத்தில் இவ்வருடத்தின் மாணவர் கலைவிழாவை திட்டமிட்டபடி நடத்த இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக நடக்க இருந்த மாணவர் கலை விழாவில் பங்கு பெறுவதற்காக வருகை புரியவிருந்த திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் வர முடியாமல் போனமையால் ரியாத் தமிழ்ச் சங்கம் வேறு சில தமிழ் ஆளுமைகளை வைத்து குறிப்பிடப்பட்ட இடத்தில், நேரத்தில் இவ்வருடத்தின் மாணவர் கலைவிழாவை திட்டமிட்டபடி நடத்த இருக்கிறது.
அயலகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களின் கல்வி, கலைத் திறன், தனித் திறன், விளையாட்டு போன்றவைகளை ஊக்குவிக்கும் உயரிய நோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பெரும் திரளாக கலந்து கொண்டு நம் கண்மணிகளாம் தமிழ் மாணவ - மாணவிகளின் திறமைகளை காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“