Advertisment

பாரதிதாசன் பல்கலை. மாணவர்களுக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு; ஜன.2-ல் பட்டமளிப்பு விழா; மோடி பங்கேற்பு

ஜனவரி 2-ம் தேதி நடைபெறும் திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடி, அதன் பிறகு, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்று 30 மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்தை வழங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Bharathidasan 1

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 143 கல்லூரிகள் வரை செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 24 கல்லூரிகள் வரை தன்னாட்சிக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன.

     

டெல்டா மாவட்டங்களான அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகம் பேருதவியாக இருக்கிறது. அப்பகுதியிலுள்ள கடைகோடி கிராமத்தைச் சேர்ந்த பலரும், தங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரியாக வருவதற்கு இப்பல்கலைக்கழகம் முக்கிய காரணம். இப்பல்கலைக்கழகம் உருவாக்கிய முதல் தலைமுறை மாணவர்கள் ஆயிரமாயிரம்.

   

இப்படி பிரசித்திப்பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபருக்குள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த பட்டமளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர், இணை வேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சர் ஆகியோரின் ஒப்புதல் பெறுவது அவசியம்.

    

அவ்வாறாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பில் 18.04.22 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மே மாதம் 13 ஆம் தேதிக்குள் மாணவர்கள் கட்டணத் தொகையை செலுத்துமாறும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.

Advertisment

Trichy Collector

   

கடந்த நவம்பர் மாதம் மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 143-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 2021 ஆம் ஆண்டு 98,000 மாணவர்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டு 98,000 மாணவர்கள், இது மட்டுமல்லாமல் பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி வாயிலாக 2021 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த 3,000 மாணவர்கள், 2022 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த 3,000 மாணவர்கள் என கிட்டத்தட்ட 2 லட்சம் மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்து பட்டம் பெறுவதற்காக பட்டமளிப்பு விழாவிற்கான தொகையை செலுத்தியும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் யாருக்கும் இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி வந்தது. இதன் காரணமாக தன்னாட்சி மற்றும் இணைப்புக் கல்லூரிகளிலும் பட்டமளிப்பு விழா நடத்துவது கேள்விக்குறியாகியிருந்தது.

இதன் காரணமாக, 3 மாதங்கள் மட்டுமே செல்லத்தக்க சான்றிதழை (Provisional certificate) வைத்துக்கொண்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு, வேலைவாய்ப்பு பெறுவதில், மாணவர்களுக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டது. இந்த பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருப்பதற்கு, உயர்கல்வித் துறை அமைச்சகத்துடனான பனிப்போரால், ஆளுநர் தரப்பிலிருந்து அனுமதி வழங்காததே இதற்கு காரணம் எனவும் கூறப்பட்ட நிலையில் பட்டமளிப்பு விழா நடத்தவேண்டும் என பட்டம் விடும் போராட்டமும் திருச்சியில் அரங்கேறியது.

   

இந்நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், பட்டயம், சான்றிதழ் படிப்பு மாணவர்கள் என மொத்தம் 2.82 லட்சம் பேர் பட்டம் பெற விண்ணப்பித்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், ஜன 2-ம் தேதி நடைபெறும் திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். அதன் பிறகு விமான நிலையம் அருகே இருக்கும்  பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்று, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுள்ள 30 மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்தை பிரதமர் மோடி வழங்கவிருக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. மீதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெறும் விழாவில் பட்டங்களை பெறுகின்றனர் எனவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

   

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தை தூய்மைப்படுத்தி, அழகுப்படுத்தும் பணிகளும் பட்டமளிப்பு விழா அரங்கு, பூங்காக்கள், அனைத்து சுவர்களிலும் வர்ணம் பூசுதல் போன்ற பணி, அலங்காரப் பணிகள் என தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

   

இதனால் தரமற்ற நிலையில் இருந்த தார்சாலைகள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் யாரும் டிசம்பர் விடுப்பு எடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   

எது எப்படியோ, சில ஆண்டுகளாக தள்ளிப்போன பட்டமளிப்பு விழாவை ஆளுநர் ரவி தற்போது பிரதமர் மோடியின் கையால் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பிப்பது பெரும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் அமையவிருக்கும் என்கின்றனர் மாணவர்கள்.

  

முன்னதாக, பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், டி.ஐ.ஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment