நாளை பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவது உறுதி : பாரதிராஜா

"நாளை காலை 9 மணிக்கு விமான நிலையம் முற்றுகை செய்து கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம். ஆனால் எப்படி என்று சொல்ல மாட்டோம்” - பாரதிராஜா...

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சி இன்று துவங்கியது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க நாளை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மோடிக்கு நாளை கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மெத்தனப்போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை தமிழக வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு கட்சியினர் முன்பே அறிவித்திருந்தனர்.

இன்று தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தப் போராட்டத்தை பாரதிராஜா உறுதி செய்தார். அப்போது பேசிய அவர், “நாளை தமிழகம் வரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவது நிச்சயம். நாளை காலை 9 மணிக்கு விமான நிலையத்தை முற்றுகையிடுவோம். தமிழர்களுக்குத் துரோகம் செய்த பிரதமர் இங்கே வரக்கூடாது.” என்று ஆவேசத்துடன் பேசினார்.

பின்னர் நேற்று சேப்பாக்கத்தில் காவலர் தாக்குதல் குறித்து ரஜினியின் ட்விட்டர் கருத்து பற்றி கேட்டபோது, “ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையல்ல; அறவழி போராட்டம். அதில் நடந்த சம்பவம் வன்முறையல்ல; எதிர்வினை. ரஜினி வாயை மட்டும் அசைக்கிறார், பின்னணியில் குரல் கொடுப்பது யார்? கூடைக்குள் இருப்பது பூ அல்ல; பூ நாகம் என இப்போதுதான் தெரியவந்துள்ளது.” என்று பாரதிராஜா விமர்சித்துள்ளார்.

தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பாரதிராஜா, அமீர், சீமான் உள்ளிட்டோர் கூட்டாக கலந்து கொண்டனர்.

×Close
×Close