பாரதிராஜா-வுக்கு குட்டு வைத்த ஐகோர்ட்: ‘நீதிமன்ற நிபந்தனையை நிறைவேற்ற முடியாதா?’

பாரதிராஜாவின் மனுவுக்கு புகார்தாரரான நாராயணன் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்திடம் இன்று குட்டு வாங்கினார். ‘பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பாரதிராஜாவுக்கு, முன் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா?’ என கேள்வி எழுப்பியது.

பாரதிராஜா, சென்னையில் ஜனவரி 18ம் தேதி நடந்த திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அதில் விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்ததுடன், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார்.

பாரதிராஜா, Bharathiraja, Director Bharathiraja

பாரதிராஜா, நிகழ்ச்சி ஒன்றில்!

பாரதிராஜாவின் இந்த விமர்சனம் தொடர்பாக, இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரதிராஜா மனு தாக்கல் செய்தார்.

பாரதிராஜாவின் மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி மே 23-ம் தேதி உத்தரவிட்டார். மூன்று வாரங்களுக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டதுடன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமின் பெற்றுக்கொள்ள உத்தரவிடப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் உத்தரவை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென புதிய மனுவை பாரதிராஜா தாக்கல் செய்தார்.

பாரதிராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

அந்த மனு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தபோது, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா பற்றி செய்திகள் வருகிறது, அதற்கெல்லாம் செல்லமுடிந்த அவரால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லையா என்றும், நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது அதன் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், கால நீட்டிப்பு கோரி கூடுதல் மனுவாக தாக்கல் செய்யாமல் புதிய மனுவாக தாக்கல் செய்ததும் தவறு என்பதை சுட்டிக்காட்டினார்.

பாரதிராஜாவின் மனுவுக்கு புகார்தாரரான நாராயணன் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்ய நாராயணனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close