scorecardresearch

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்திருக்கும் முடிவு அபாயகரமானது – பாரதிராஜா

தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் இருக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை நசுக்க அவர்கள் முடிவெடுத்து விட்டார்கள்

Tamil Nadu news live updates
Tamil Nadu news live updates

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்திருக்கும் முடிவு அபாயகரமானது என்று இயக்குனர் பாரதிராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு சரியான தலைமை இல்லாத சூழ்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை சூறையாடக்கூடிய ஒரு அபாயகரமான செயல்திட்டத்தை, திருப்பூர் சுப்பிரமணியன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் 60 சதவீத வசூலையும் , சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 சதவீத வசூலையும் இவர்கள் தருவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் இருக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை நசுக்க அவர்கள் முடிவெடுத்து விட்டார்களோ என்ற அச்சம் எழுவதை தடுக்க முடியவில்லை. இந்த விகிதாச்சார முறை அமலுக்கு வருமானால், ஏற்கனவே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துக்கொண்டிருக்கிற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், நிர்வாகிகளும் இல்லை என்றாலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு உள்ளது. ஆகவே தியேட்டர் உரிமையாளர்கள் புதிதாக எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதைப்பற்றி அந்த குழுவோடு கலந்து ஆலோசித்துவிட்டு அதற்கு பின்னர் அந்த முடிவுகளை பற்றி தெரியப்படுத்த வேண்டும். தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான வேண்டுகோளை அறிவிப்பது தான் முறை. இவை எல்லாவற்றையும் மீறி தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால், இந்த முடிவுகளை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்று பாரதிராஜா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bharathiraja slams tamil film producers association decision