பாரதி எனும் தமிழ்க் காதலனின் நினைவு தினம் இன்று

பாரதியின் கவிதைகளில் கண்ணம்மா தான் அவருக்கு அனைத்தும் !

பாரதியார் நினைவு தினம் :  சொன்ன மாத்திரத்திலே சுடரென பரவும் ரௌத்திரம் தான் பாரதி என்ற பெயருக்கு அர்த்தமாக இருக்கக் கூடும். கண்ணன் என் காதலன், கண்ணம்மா என் காதலி என்று தமிழின் ஒவ்வொரு வார்த்தைக்கும் புது அழகூட்டிய கவிஞன், தமிழ் விரும்பும் நெஞ்சங்களின் காதலன் இந்த பாரதி.

பாரதியார் எனும் தமிழ்க் காதலன்

அன்றைய திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் சின்னச்சாமி ஐயர் மற்றும் லட்சுமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். இந்திய விடுதலை மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கென அய்யன் ஆற்றிய பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்றும் பாரதியை தூக்கிக் கொண்டாடக் கூடிய ஒரு காதலனாக வைத்திருப்பவள்  கண்ணம்மா தான்.

பொங்கு தமிழும், நையப்புடைக்கும் ரௌத்திரமும் பாரதியை வணங்க வைக்குமென்றால் கண்ணம்மாக்கள் பாரதியை மிக எளிதில் காதலிக்க வைத்துவிடுகிறார்கள்.

பாரதியின் 97வது நினைவு தினம் இன்று. அவருடைய இறந்த தினத்தில் அவரின் கவித்துவம் மிக்க தமிழ் வரிகளை நினைவு கூறுவோம்.

பாரதியின் பார்வையில் பெண்கள் என்று ஒரு தலைப்பிட்டு அவர் பெண்ணுரிமைக்காக, பெண்ணியத்திற்காக பாடிய பாடல்கள் அனைத்தையும் பேருவகை கொண்டு எழுதிவிடலாம். ஆனால் கண்ணம்மாவிற்கு அவர் எழுதிய பாடல்கள் தான் இன்றும் பல்வேறு கவிஞர்களுக்கும் காதலின் பிறப்பிடம்.

பாரதியின் கண்ணம்மா

யாரிந்த கண்ணம்மா என்றால் அதற்கு இங்கு பதிலே இல்லை. அவள் செல்லம்மாவாகவும் இருக்கலாம், தான் பெற்ற இரண்டு பெண் பிள்ளைகளான தங்கம்மாளும் சகுந்தலையாகவும் இருக்கலாம் அல்லது பாரதி தூக்கி வளர்த்த சுதேசி பத்திரிக்கையின் நிறுவர் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரி அவர்களின் மகள் யதுகிரியாகவும் கூட இருக்கலாம். கண்ணம்மா பாரதி காதலியாக மட்டும் இல்லை. நல்ல மகளாக, உற்ற துணையாக, தோழியாக கண்ணம்மா பாரதியுடன் பயணிக்கிறாள். இவள் மீது தனிப்பட்ட முறையில் பொறாமை என்றுமே உண்டு.

கண்ணம்மா என்றும் திரைப்படத் துறைகளில் மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் உரிய காதலி. அதனால் தான் அடிக்கடி அவளின் பெயரை நாம் அடிக்கடி பாடல்களில் கேட்டுக் கொண்டிருப்போம்.

“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”

–  கண்ணம்மா என் காதலி

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!

இந்த ஊறு சுவை காதலுக்கு இங்கு நிகரேது. மீண்டும் ஒரு முறை பாரதி ஜணித்த வந்த பின்பு தான் இக்காதலை இதே உணர்வுடன் கொண்டு வந்து தமிழ் அன்னைக்கு வார்த்தை மாலைகளாக்கி சமர்பிக்க இயலும் என்றால் அதற்கு நிகரில்லை.

துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட   

என நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா என்பார் பாரதி.

சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்ம தியில்-வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ?-இது பார்.
கன்னத்து முத்த மொன்று!

இங்கு கவிஞன்  சரணடைவதற்கும் கண்ணம்மாவே தேவைப்படுகிறார்.  பாரதியின் கவிதைகளில் கண்ணம்மா தான் அவருக்கு எல்லாமே என்பது தான் உண்மை.

1921ம் ஆண்டு தன்னுடய 38வது வயதில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கி தாக்கியதால் கடுமையான உடல்நலக் கோளாறுக்கு ஆளானார். பின்னர் 1921ம் ஆண்டு செப்டம்பர் 12 காலை 01.30 மணி அளவில் உயிரிழந்தார் பாரதி. ஆனாலும் கண்ணம்மாளோ இங்கு லட்சோப லட்சம் காதல் நெஞ்சில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close