“அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் மிகப்பெரிய பேரம்” – ராமதாஸ் திடுக் தகவல்!

துணைவேந்தர்கள் நியமனத்தில் நிலவும் ஊழல் தான் நேர்மையானவர்கள் அப்பதவிக்கு வருவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது

By: Published: November 21, 2017, 3:20:14 PM

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழ்நாடு 3 முதலமைச்சர்களையும், 3 ஆளுனர்களையும் பார்த்து விட்ட நிலையில், மிக முக்கியமான அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மட்டும் துணைவேந்தர் நியமிக்கப்படாதது மிகப்பெரிய அவலமாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் இராஜாராம் கடந்த ஆண்டு மே 26&ஆம் தேதி ஓய்வு பெற்றார். பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி மையங்கள் என்பதால் அவை தலைமை இல்லாமல் இருக்கக்கூடாது. அதனால் பதவியில் இருக்கும் துணைவேந்தர் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்பதால் அதன் துணைவேந்தர் பதவி ஒரு நாள் கூட காலியாக இருக்கக்கூடாது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி 18 மாதங்களாக நிரப்பப்படாமல் கிடக்கிறது. இதுதொடர்பாக தமிழக ஆட்சியாளர்களுக்கு எவ்வித குற்ற உணர்வுமில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிப்பதில் இவ்வளவு கால தாமதம் தேவையற்றது. அப்பதவிக்கு தகுதியான, திறமையான பேராசிரியர்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளனர். ஆனால், துணைவேந்தர்கள் நியமனத்தில் நிலவும் ஊழல் தான் நேர்மையானவர்கள் அப்பதவிக்கு வருவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுக்க பதவிக்கு தகுதியானவர்களை பரிந்துரைக்க தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு ஆறு மாத ஆய்வுக்குப் பிறகு 3 பேரின் பெயர்களை ஆளுனருக்கு பரிந்துரைத்தது. ஆனால், அந்த மூவரின் தகுதியிலும் திருப்தி இல்லாததால் அவர்களின் பெயர்களை ஆளுனர் நிராகரித்தார்.

அதன்பின் 4 மாதங்களில் புதிய துணைவேந்தர் அமைக்கப்படுவார் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதன்பின்னர் 6 மாதங்களாகி விட்ட நிலையில் இன்னும் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி வளர்ச்சிப் பணிகள் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த ஆண்டு திசம்பர் மாதமே நடந்திருக்க வேண்டிய பட்டமளிப்பு விழா 6 மாதங்கள் தாமதமாக கடந்த மே மாதம் நடைபெற்றது. துணைவேந்தர் நியமிக்கப்படாததால் அவரது கையெழுத்து இல்லாமல் உயர்கல்வித்துறை செயலாளரின் கையெழுத்துடன் பட்டங்கள் வழங்கப்பட்டன. அடுத்த பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் நடத்தப்பட வேண்டிய நிலையில் அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.

துணைவேந்தர் இல்லாததால் கடந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு தேவையற்ற சிக்கல்கள் உருவெடுத்தன. அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படவுள்ளது. இத்தகைய தருணங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க வசதியாக துணைவேந்தர் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவி ஒன்றரை ஆண்டுகளாக காலியாக இருக்கும் நிலையில், பதிவாளரின் பதவிக்காலமும் முடிவடைந்து விட்டதால் அண்ணா பல்கலைக்கழகம் தலைமையின்றி தடுமாறுகிறது.

இனிவரும் காலங்களில் துணைவேந்தர்கள் ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் முன்பாகவே புதியத் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், அண்ணா பல்கலைக்கு இப்போது தேர்வுக்குழுக் கூட இல்லாதது தான் கொடுமையாகும். தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, கான்பூர் ஐ.ஐ.டியின் முன்னாள் இயக்குனர் அனந்தபத்மநாபன் ஆகியோர் பதவி விலகியதால், இப்போது ஒற்றை உறுப்பினர் மட்டுமே உள்ளார். புதிய உறுப்பினர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் நியமிக்கப்படுவர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தாலும் இன்னும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.

அண்ணா பல்கலைத் துணைவேந்தர் பதவிக்கு மிகப்பெரிய விலை நிர்ணயிக்கப்பட்டு அது தொடர்பாக பேரம் நடைபெற்று வருவது தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எம். ராஜாராம் தாம் மீண்டும் துணைவேந்தராக நியமிக்கப்படவிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறி வருவது இதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் நியமன விவகாரத்தில் இப்போது நடப்பது எதுவுமே நல்லதாகத் தெரியவில்லை. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திறமையான, தகுதி வாய்ந்த, நேர்மையான ஒருவரை துணைவேந்தராக தேர்வு செய்யும் வகையில் அப்பழுக்கற்றவர்களைக் கொண்ட புதிய தேர்வுக்குழுவை தமிழக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Big deal in vice chancellor appointment at anna university ramadoss

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X