பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தை அவமதித்ததாக, நடிகர்கள் கமலஹாசன், சக்தி உள்ளிட்டோருக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு இசை வேளார் இளைஞர் நல சங்கத்தின் தலைவர் கே. ஆர். குகேஷ், தாக்கல் செய்த மனுவில், விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த ஜூலை 14-ம் தேதி ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் போது நாதஸ்வர வித்வானாக நடித்த நடிகர் சக்தி
தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தை அவமதிக்கும் விதமாக கையாண்டார்.
மேலும் நாதஸ்வரத்தை உணவு அருந்தும் மேஜையில் வைத்து அவமதித்தார். இந்த செயல் இசை வேளாளர் சமுதாயத்தினரின் நம்பிக்கையையும், தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தையும் அவமதிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
நாதஸ்வர கருவியின் முகப்பு பகுதி சூரியக்கடவுளாகவும், காற்றை ஊதும் பகுதியை சக்தியாகவும், அந்த நாதஸ்வரத்தில் இருந்து வரும் இசையை, சிவனாகவும் பாவித்து வருவதாகவும். அந்த தெய்வீக இசை கருவியை ஆவமானப்படுத்தும் விதத்தில் பயன்படுத்திய நடிகர் சக்தி மற்றும நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன், விஜய் டிவி ஆகியோர் 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பை கோர வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினேன். மேலும் மன்னிப்பு கேட்பதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்யவேண்டும், விஜய் டி.வி.யில் ஒளிபரப்ப வேண்டும் என கூறியுள்ளார்.
இதை செய்யவில்லை என்றால் நடிகர்கள் கமலஹாசன் , சக்தி, விஜய் டிவி உள்ளிட்டோர் மீது சட்டரீதியான சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கபட்டது. ஆனால் இதுவரை அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவில்லை.
எனவே நடிகர்கள் கமல்ஹாசன், சக்தி மற்றும் விஜய் டிவி நிறுவனம் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கிரிமினல் கீழ் அவதூறு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை மனுதார் கே. ஆர். குகேஷ் எழும்பூர் 14-வது பெரு நகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்தார். இதனை அடுத்து வழக்கு விசாரணை நீதிபதி செப்டம்பர் 1-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.