காவல்துறை அதிரடி.. கஞ்சா சாக்லேட் வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது
கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மீது ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போதை பொருள் ஒழிப்பிற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப்குமார் (38) என்பவர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisment
இந்தநிலையில் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்ட குற்றத்தின் அடிப்படையில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்.பி பரிந்துரை செய்ததன் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அதற்கான உத்தரவை வழங்கினார். ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் திலீப்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 5 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/