பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 54 லட்சம் வாக்காளர்கள், ஜூலை 25-க்குள் தங்கள் வாக்காளர் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார். பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) கீழ், மாநிலத்திற்கு வெளியே பணிபுரியும் வாக்காளர்களுக்காக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR):
பீகாரில் ஜூன் 24 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், மொத்தமுள்ள 7,89,69,844 வாக்காளர்களில், இதுவரை 6,99,92,926 வாக்காளர்களிடமிருந்து (88.65%) கணக்கெடுப்புப் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் ஜூலை 16, 2025 தேதியிட்ட செய்தி வெளியீட்டின்படி, 6.85% (54,07,483) வாக்காளர்களிடமிருந்து மட்டுமே படிவங்கள் பெறப்பட வேண்டும். இந்த 54 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பெரும்பாலும் பீகாருக்கு வெளியே தற்காலிகமாக வசிப்பவர்களாக இருக்கக்கூடும். அடுத்த 9 நாட்களுக்குள், அதாவது ஜூலை 25-க்குள் இந்த விடுபட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்கள் கணக்கெடுப்புப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை, 6,47,24,300 (81.96%) படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
படிவம் பூர்த்தி செய்யும் வழிகள்:
பீகாருக்கு வெளியே தற்காலிகமாக வசிக்கும் வாக்காளர்கள் தங்கள் கணக்கெடுப்புப் படிவத்தை நிறைவு செய்ய பின்வரும் வழிகளைப் பயன்படுத்தலாம். தங்கள் அலைபேசியில் https://voters.eci.gov.in என்ற வலைதளம் அல்லது ECINET என்ற செயலி வாயிலாக இணையவழியில் தாங்களாகவே படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். முன்னரே நிரப்பப்பட்ட படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்ட நகலை வாட்ஸ்அப், மின்னஞ்சல் அல்லது பிற வழிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு அனுப்பலாம். குடும்ப உறுப்பினரின் உதவியுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு படிவத்தை அனுப்பலாம்.
படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கணக்கெடுப்புப் படிவத்தை நிறைவு செய்ய, பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம். மத்திய / மாநில / பொதுத்துறை நிறுவனத்தின் நிரந்தப் பணியாளர் / ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய வழங்கல் ஆணை (PPO). 01.07.1987-க்கு முன்னர் இந்தியாவில் உள்ள யாதொரு அரசு / உள்ளாட்சி அமைப்பு / வங்கி / அஞ்சல் அலுவலகம் / இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் / பொதுத்துறை நிறுவனத்தால் வழங்கப்பட்ட யாதொரு ஆவணம். தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு வாயிலாக வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ். கடவுச்சீட்டு (Passport). அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட கல்விச் சான்றிதழ். தகுதிவாய்ந்த மாநில அதிகார அமைப்பு வாயிலாக வழங்கப்பட்ட நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ். வன உரிமைச் சான்றிதழ். தகுதிவாய்ந்த அதிகாரி வாயிலாக வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ். தேசிய குடிமக்கள் பதிவேடு (இருப்பின்). மாநில / உள்ளூர் அதிகார அமைப்புகளால் உருவாக்கப்பட்ட குடும்பப் பதிவேடு. அரசால் வழங்கப்பட்ட நிலம் அல்லது குடியிருப்பு ஒதுக்கீட்டுச் சான்றிதழ். இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கணக்கெடுப்புப் படிவத்துடன் இணைப்பது, வாக்காளர் பெயரைச் சேர்ப்பதில் தேர்தல் பதிவு அலுவலருக்கு ஏதுவாக அமையும். ஆவணம் உடனடியாகக் கிடைக்கப்பெறாத போது, அதை ஜூலை 25, 2025 அன்று வரையில் அல்லது கோரிக்கை / மறுப்புரைக்கான கால அளவிற்குள் (அதாவது, ஆகஸ்ட் 1, 2025 முதல் செப்டம்பர் 1, 2025 வரையில்) அளிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் சரிபார்ப்பு:
வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியிடப்படவுள்ளது. மேலும் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை ஆகஸ்ட் 1, 2025 முதல் செப்டம்பர் 1, 2025 வரை அளிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் ECINET செயலி அல்லது https://voters.eci.gov.in என்ற இணைப்பில் தங்கள் படிவத்தின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம். பீகார் வாக்காளர்களாக இருந்து, தற்காலிகமாக மாநிலத்திற்கு வெளியே வசிப்பவர்கள், தங்கள் அலைபேசியைப் பயன்படுத்தி கணக்கெடுப்புப் படிவத்தை உடனடியாக நிறைவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.