தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: எந்த கட்சிகள் ஆதரவு, எவை எதிர்ப்பு?

தமிழகத்தில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, பாமக எதிர்ப்பு தெரிவிப்பதோடு இருமொழிக் கொள்கையை வரவேற்றுள்ளன. அதே நேரத்தில், பாஜக மும்மொழிக் கொள்கையை வரவேற்றுள்ளது.

By: August 3, 2020, 11:43:30 PM

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, பாமக எதிர்ப்பு தெரிவிப்பதோடு இருமொழிக் கொள்கையை வரவேற்றுள்ளன. அதே நேரத்தில், பாஜக மும்மொழிக் கொள்கையை வரவேற்றுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக் கொள்கையில், முழ்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழியை மாநிலங்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், சமஸ்கிருதம் ஒரு விருப்ப மொழி பாடமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மும்மொழிக் கொள்கை இந்தி மொழியை திணிக்கும் முயற்சி என்று அரை நூற்றாண்டு இந்தி எதிர்ப்பு அரசியல் பாரம்பரியம் கொண்ட தமிழக மாநில கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த ஒரு மொழியை திணிக்கப்படாது என்று உறுதியளித்து ட்விட்டரில் பதிவிட்டார்.

ஆனாலும், முன்றாவது மொழியாக மாநிலங்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்றாலும் அந்த மூன்றாவது மொழியாக இந்தி டிஃபால்ட்டாக இருப்பதாக தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர்.

மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் மத்திய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி கடிதம் எழுதியது.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சமூகநீதி-பன்முகத்தன்மைக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை அதிமுக அரசு எதிர்க்காதது ஏன்? தாய்மொழி வளரவும், ஆங்கிலம் கற்று உலகளவில் தமிழகம் சாதிக்கவும் காரணமான பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையைப் பலி கொடுக்கத் திட்டமா? எம்ஜிஆர்,ஜெயலிலதாவுக்கும் சேர்த்தே துரோகம் செய்ய துணிந்துவிட்டனரா?” என்று கேள் எழுப்பினார்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதே நேரத்தில் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தன.

அதே நேரத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரவேற்பு தெரிவித்தன.

இந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை. இருமொழிக் கொள்கை தொடரும் என்று அறிவித்தார். மேலும், புதிய கல்விக் கொள்கையை ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.


முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று நன்றி தெரிவித்தார். அதே போல, காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி எம்.பி. ஜெயக்குமார், “சபாஷ் முதல்வர். தாய்மொழி உணர்வோடு மத்திய அரசின் மும்மொழி கொள்கையை மறுத்து மாநில அரசு இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்ற உங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


அதே போல, விசிக தலைவர் திருமாவளவன், மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்று கூறியுள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “பிறபாதிப்புகள் பற்றி தமிழகஅரசின் நிலை குறித்து எதுவும் இல்லை. உடனே சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை முற்றாக மறுதலிக்கவேண்டும். அதனை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டில், “இருமொழி கொள்கையே தமிழகம் ஏற்கும் என்ற தமிழக அரசின் இந்த முடிவை விசிக வரவேற்கிறது. பொதுமக்களின் உணர்வுகளையும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் ஏற்று தமிழக அரசு இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. களங்கத்தைத் தவிர்க்கும் கனமான முடிவு.” என்று பாராட்டியுள்ளார்.

அதே போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசிய கல்விக் கொள்கையில் முழ்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். ஏற்கனவே நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையை பின்பற்றுவோம் என்ற முதல்வர் அறிவிப்பை வரவேற்கிறோம்” என்று கூறினார்.


அதே போல, பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் “மும்மொழி கொள்கை மோசடி என்றால், இருமொழி கொள்கை என்பது ஏமாற்று வேலையாகும். ஒரு மொழி கொள்கை என்பதே நமது உரிமை கொள்கை என்பதில் எதிர்காலத்தில் நிலைநிறுத்த வேண்டும். தாய்மொழி தமிழை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.


அதே நேரத்தில், புதிய கல்விக் கொள்கையையும் மும்மொழிக் கொள்கையையும் கொண்டுவந்துள்ள மத்திய அரசின் பாஜக சார்பில், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “நமக்கு எதிரான கொள்கை கொண்டவர்களாயினும் அதில் உறுதியாக இருந்தால் நாம் மதிக்கலாம். தங்கள் குழந்தைகளை மும்மொழிப் பள்ளிகளில் படிக்கச் செய்து கொண்டு நாங்கள் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம் என்பது ஏமாற்றுவேலை. இவர்கள் குழந்தைகள் பேரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் விவரம் சேகரிப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Bilingual policy who is who supported parties and opposed parties

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X