தமிழக டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கட்டணம், போலி மதுபானம் உள்ளிட்ட பிரச்சனைகள் கடும் விமர்சனம் செய்யப்பட்டன. குறிப்பாக மதுபாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.10 கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதுகுறித்தான வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க டாஸ்மாக் கடைகள் கணினிமயமாக்கப்படும் என மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அறிவித்தது. மேலும் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பணியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அத்துறை அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்தார். அதோடு டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க வருவோருக்கு பில் கொடுக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி, "டாஸ்மாக் கடைகளில் பில் போடும் இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில கடைகளுக்கு அந்த இயந்திரம் கொடுக்க வேண்டியுள்ளது. இயந்திரம் கொடுக்கும் வேலை ஓரிரு மாதங்களில் முடிவடைந்துவிடும். அதன் பிறகு, மது பாட்டில் விற்பனை செய்யப்படும் போது பில் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். பில்லில் இருப்பதை விட கூடுதலாக பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை இருக்கும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“