கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை (15-ம் தேதி) 82 அடியாக இருந்த நிலையில் அணைக்கான நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நள்ளிரவில் 95 அடியை எட்டியது. இந்நிலையில், தொடர் மழையால் அணைக்கான நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக இருந்ததால் அணையின் நீய்மட்டம் மீண்டும் உயர துவங்கி நள்ளிரவு அணை அதன் முழு கொள்ளளவான 100 அடியை நெருங்கியது.
இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்மட்டத்தை 97.5 அடியாக நிலை நிறுத்தி பராமரிக்கும் விதமாக அணைக்கான தற்போதைய நீர்வரத்தான வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் வேகம் அதிகரிக்க துவங்கிய நிலையில், பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோர பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. காவல்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மேட்டுப்பாளையம் வருவாய்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.