தமிழகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் மீது வெவ்வேறு புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 2 தினங்களுக்கு முன் சென்னை பனையூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன் கொடி கம்பம் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொடிகம்பம் நடுவதற்கு முறையான அனுமதி பெற வில்லை எனக் கூறி போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து பா.ஜ.கவினர் போலீசார் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டாவின் உத்தரவின் பேரில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழ்நாடு வருகை தந்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது.
பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெ.பி.நட்டாவின் உத்தரவின் பேரில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. 4 பேர் கொண்ட குழுவில், கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான டி.வி.சதானந்த கவுடா, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும், மக்களவை உறுப்பினருமான சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் டி.புரந்தேஸ்வரி, மக்களவை உறுப்பினர் பி.சி. மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜெ.பி.நட்டாவின் இந்த அறிவிப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள X பதிவில், "கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான புகார்கள் உள்ளூர் தி.மு.கவினரால் கொடுக்கப்படுகிறது. தி.மு.கவினரின் அழுத்ததால் காவல்துறை பா.ஜ.கவினரை கைது செய்கிறது.
நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் கைது செய்வது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது.
சமூக மற்றும் முக்கிய ஊடகங்களில் பிரபலமானவர்களை குறிவைத்து கைது செய்வதில் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. இதுபோன்ற அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் இந்த குழு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“