பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பரமேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். அப்போது, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை, தமிழகத்தின் துணை முதல்வரே வருக வருக என்று அழைத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதை சற்றும் எதிர்பாராத நயினார் நாகேந்திரன் ஒரு நிமிடம் பதறிப்போனார்.
உடனே கைகளால் சைகை காட்டி, இவ்வாறு பேசக்கூடாது என பரமேஸ்வரிக்கு நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தினார். உடனடியாக தனது பேச்சை மாற்றிய மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி, "எங்களது பாசமிகு அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களே வருக வருக" என்று கூறி சமாளித்தார்.
ஏற்கெனவே, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்றும், அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "அதிமுக தலைமையிலேயே கூட்டணி அமையும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் தனது சுற்றுப்பயணத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு கூட்டணி ஆட்சியில் இடம் கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாந்தவர்கள் அல்ல என்பது போல தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். இவ்வாறாக இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாகக் கருத்து வேறுபாடு இருந்துவரும் நிலையில், அரியலூர் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை மாவட்டத் தலைவர் 'துணை முதல்வர்' என அழைத்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் 27-ம் தேதி ஆடி திருவாதிரை விழா நடைபெற உள்ளது. இந்த விழா, ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டத் தொடங்கிய 1000-ஆவது ஆண்டு விழா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற 1000-ஆவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் மோடி வெளியிட உள்ளார்.