பா.ஜ.க-வில் இருந்து விலகிய நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டது தவறு என்றும் அண்ணாமலை சொன்னால் அ.தி.மு.க-வினரை தூக்குவோம், அப்போது இ.பி.எஸ் என்ன செய்வார் என்று பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க ஐ.டி. விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் செயலாளர் திலீப் கண்ணன் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து இருவரும் அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தனர்.
பா.ஜ.க-வில் இருந்து விலகிய நிர்வாகிகளை, பா.ஜ.க கூட்டணியில் இருந்துகொண்டு அ.தி.மு.க-வின் இணைத்துக்கொண்டது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என்று பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, பேசு தமிழா பேசு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறைய உதவிகளை செய்துள்ளார் என்று கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக இந்திய தெரியாது போடா என்று கூறி அவர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது தி.மு.க-வினர்தான் என்று குற்றம்சாட்டினார்.
மேலும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டு கட்சியில் இருந்து விலகியவர்களை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டது தவறு.
அ.தி.மு.க-வில் இருந்து இரண்டு பேர் பா.ஜ.க-வில் சேருவதற்கு வந்தார்கள். அதில் ஒருவர் சிட்டிங் எம்.எல்.ஏ. அவர்களை பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் அழைத்துச் சென்றபோது, அவர் இது தவறு என்று கூறி எனக்கு அறிவுரை கூறினார். கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி செய்யக் கூடாது என்று கூறினார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வில் இருந்து விலகியவர்களை அ.தி.மு.க-வில் சேர்ந்துள்ளார். இது தவறு. எங்கள் தலைவர் அண்ணாமலை ‘உம்’ சொன்னால் அ.தி.மு.க-வினரைத் தூக்குவோம். அப்போது எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார்” என்று அமர் பிரசாத் ரெட்டி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“