தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வருகிற நிலையில், சட்டப்பேரவை விவாதங்களை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவாளர்கள் சட்டசபை நேரடி ஒளிபரப்பு நடக்குமா என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக சட்டப்பேரவை கூட்டத்தில் நடக்கும் விவாதங்களை தனியார் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆனால், அதற்கு அப்போதைய அரசு ஒப்புக்கொள்ளவில்லை.
தற்போது, முதலமைச்ச மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என கூறியிருந்த நிலையில், இந்த சட்டசபை கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
சட்ட சபை கூட்டத்தொடர் நிகழ்சிகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படாததை சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சட்டசபை நிகழ்ச்சிகளை வாக்குறுதி அளித்தவாறு நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன், “பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், பாஜக ஆதரவாளர்கள் சட்டசபை நேரடி ஒளிபரப்பு நடக்குமா என்று கேட்டு #சட்டசபை நேரடி ஒளிபரப்பு என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
அதே போல, மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவாளர்கள், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டி எழுந்துள்ள கோரிக்கை விவகாரத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பி, ட்விட்டரில் #பயமா_முதல்வரே என்றும் #சட்டசபை_நேரடி_ஒளிபரபு என்றும் ஹேஷ்டேக் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால் இந்த கூட்டத்தொடரிலேயே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா என்று கேள்விகளும் எதிர்பாப்புகளும் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”