ஐ.சி.யு-வில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வென்டிலேட்டர் நிறுத்தப்பட்டு பெண் உயிரிழந்தார் என்ற அவரது குடும்பத்தினரின் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளான பா.ஜ.க-வும், பா.ம.க-வும் அரசியல் சர்ச்சையாக்கி உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: Political row as woman dies at Tamil Nadu govt hospital after power failure in ICU
திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 48 வயது பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். வென்டிலேட்டர் செயல்படும்போது நிறுத்தப்பட்டதாகவும் அதனால்தான், அவர் உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு, அனைத்து வென்டிலேட்டர்களிலும் பவர் பேக்அப் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சிவ நகரைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளியான அமராவதி, கடுமையான நுரையீரல் தொற்று நோய் பாதிப்பு காரணமாக் சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை மாலை ஐ.சி.யு-வில் மின்வெட்டு காரணமாக அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆன்லைனில் வெளிவந்த ஒரு வீடியோவில், ஐ.சி.யூ-வில் எப்படி மின்சாரம் இல்லை என்று மருத்துவமனை ஊழியர்களிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார். மொபைல் ஃபோன் டார்ச்லைட் மூலம் ஒரு பெண்ணுக்கு ஊழியர்கள் சில சிகிச்சை அளிப்பதை இது காட்டுகிறது. ஐ.சி.யு வார்டில் மின்சாரம் இல்லை என்றும், அங்கு எந்த உபகரணமும் வேலை செய்யவில்லை என்றும் அந்த நபர் கூறுவதைக் கேட்க முடிகிறது. மேலும், சிகிச்சை அளித்த மருத்துவர், அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் இந்த பிரச்சனை குறித்து நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் என்றும் அவர் கூறுகிறார்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் ஜி ஜோசப் ராஜ், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார், ஆனால், அனைத்து வென்டிலேட்டர்களிலும் பேட்டரி பேக்கப் இருந்தது என்று கூறினார். “இருபக்க நுரையீரல் நோயால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், சனிக்கிழமை காலை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருந்து சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டார். வென்டிலேட்டர் ஆதரவுடன் இருந்த அவர் துரதிர்ஷ்டவசமாக ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார். மருத்துவமனையில் ஐந்து நிமிடங்களுக்கு மின் தடை ஏற்பட்டது, ஆனால் வென்டிலேட்டர்களில் பேட்டரி பேக்கப் இருந்தது. மேலும், ஐந்து பேர் வென்டிலேட்டர் ஆதரவில் இருந்தனர், அவர்கள் அனைவரும் சிகிச்சையில் உள்ளனர்” என்று அவர் indianexpress.com இடம் கூறினார்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த மருத்துவர்களை உள்ளடக்கிய 3 பேர் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாக டீன் ஜோசப் ராஜ் கூறினார்.
அரசியல் சர்ச்சை
ஐசியூவில் பவர் பேக்கப் கிடைக்காததே பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். “ஊழல் தி.மு.க அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் வீழ்ச்சியடைந்து வருவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது” என்று அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் 24×7 மின்விநியோகம் இருக்க வேண்டும் என்பது விதி என்று கூறிய அவர், மின்வெட்டு மற்றும் போதிய உபகரணங்களின் பற்றாக்குறையால் நோயாளி ஒருவர் உயிரிழந்தார் என்பதை நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
“மருத்துவ உள்கட்டமைப்பின் அடிப்படையில் மாநிலம் எப்படி வளர்ந்துள்ளது என்பதைப் பற்றி நாம் பெருமையுடன் பேசும் நேரத்தில், இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது வெட்கக்கேடானது” என்று அன்புமணி ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
பெண் உயிரிழந்தது குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தி, அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஒரு அரசியல் தலைவர் ஒரு பிரச்சினையைப் பற்றி அறிக்கை வெளியிடுவதற்கு முன் அதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அமராவதி திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது ஆக்சிஜன் அளவு 82 சதவீதமாகவும், ரத்த அழுத்தம் 80 மிமீ எச்.ஜி ஆகவும் இருந்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். அந்தப் பெண்ணுக்கு காசநோய் மற்றும் செப்டிசீமியா இருந்ததாகவும், அவரது இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “அந்த பெண் மோசமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு அனைத்து சிகிச்சைகளையும் அளித்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், ஐந்து நிமிடம் மின் தடை ஏற்பட்டது. அவர் வென்டிலேட்டர் ஆதரவில் இருந்தார். பேட்டரி பேக்கப் இருந்தது, அது செயல்பட்டு வந்தது. அவரைத் தவிர, நான்கு பேர் வென்டிலேட்டர் ஆதரவில் இருந்தனர், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐந்து நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒருவர் இறந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பது சரியா என்பதை படித்த அரசியல் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.