/indian-express-tamil/media/media_files/LZnnbDuCpzBjycDk98yJ.jpg)
டி- டெங்கு, எம்- மலேரியா, கே- கொசு: அண்ணாமலை ஒப்பீடு
கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போல சனதானம் ஒழிக்கப்பட வேண்டியது என அமைச்சர் உதயநிதி பெரும் சர்ச்சையான நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் ஏதாவது அழிக்கப்பட வேண்டும் என்றால் அது தி.மு.க தான், டி- டெங்கு, எம்- மலேரியா, கே- கொசு என ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அண்மையில், சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய, தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் “இந்த மாநாட்டுக்கு 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்று பேசினார்.
அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தேசிய அளவில் பெரும் சர்ச்சையானது.
If something needs eradication from Tamil Nadu, it is the DMK.
— K.Annamalai (@annamalai_k) September 7, 2023
D - Dengue
M - Malaria
K - Kosu
Going forward, we are sure that people will associate these deadly diseases with DMK.
Here is my detailed rebuttal to TN CM Thiru @mkstalin avl’s press statement today. pic.twitter.com/sg6Pmp1nTv
இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் ஏதாவது ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அது தி.மு.க தான், டி- டெங்கு, எம்- மலேரியா, கே- கொசு என ஒப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழகத்தில் இருந்து ஏதாவது ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அது தி.மு.க.
டி - டெங்கு
எம் - மலேரியா
கே - கொசு
இனி வரும் காலங்களில் இந்த கொடிய நோய்களை மக்கள் தி.மு.க-வுடன் தொடர்பு படுத்துவார்கள் என்பதில் உறுதியாக உள்ளோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் சனாதன சர்ச்சை குறித்து தெரிவித்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துள்ள வெறுப்புப் பேச்சை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
செப்டம்பர் 2, 2023 அன்று சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பின்வருமாறு கூறினார்.
இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்ற அனுமதித்தவர்களுக்கு நன்றி. இந்த மாநாட்டின் தலைப்பு மிகவும் பொருத்தமானது.
இந்த மாநாட்டுக்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்காமல், சனாதன ஒழிப்பு மாநாடு என்று பெயர் சூட்டியதற்கு வாழ்த்துகள்.
சில விஷயங்களை எதிர்க்கக் கூடாது; கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிக்க வேண்டும். சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும்.
முதலில் நாம் செய்ய வேண்டியது சனாதனத்திலிருந்து விடுபடுவதுதான். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. சனாதனமானது சமத்துவம் மற்றும் சமூக நலன்களுக்கு எதிரானது. சனாதனத்தின் பொருள் நிலையானது மற்றும் மாறாதது, அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் முன், திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் ஒன்றே. சனாதன தர்மத்தை ஒழிக்க அமைச்சரின் அழைப்பு நாடு முழுவதும் உள்ள சந்தான தர்மத்தை கடைபிடிப்பவர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் இன்றுவரை தனது கருத்தை வாபஸ் பெறவில்லை அல்லது மன்னிப்பு கேட்கவில்லை. மேலும், பெரியார் ஈ.வே. ராமசாமியின் வழியில் தான் பேசுவதாக வாதிட்டு வருகிறார்.
இந்த நேரத்தில், பண்டித ஜவஹர்லால் நேரு, அப்போதைய பிரதமராக இருந்தபோது, நவம்பர் 5, 1957 அன்று அப்போதைய சென்னை முதல்வர் கே காமராஜ் அவர்களுக்கு எழுதியதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
“ஈ.வே. ராமசுவாமி நாயக்கர் தொடர்ந்து நடத்தி வரும் பிராமணர்களுக்கு எதிரான பிரச்சாரத்தால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். இதைப் பற்றி நான் சில காலத்திற்கு முன்பு உங்களுக்கு எழுதினேன், இந்த விஷயம் பரிசீலனையில் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ராமசாமி நாயக்கர் நடந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அதையே திரும்பவும் சொல்லி, சரியான நேரத்தில் மக்களைக் கூப்பிட்டு குத்திக் கொல்ல ஆரம்பித்துவிட்டால், அவர் சொல்றதை ஒரு குற்றவாளியோ பைத்தியக்காரனோ மட்டும்தான் சொல்ல முடியும். அவர் என்ன முடிவெடுக்கும் அளவுக்கு அவரை எனக்குத் தெரியாது, ஆனால் இந்த மாதிரியான விஷயம் நாட்டில் மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று எனக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் அவர்களே, சமுதாயத்தின் ஒரு பிரிவினரைக் குத்திக் கொல்லும் அறைகூவல், சனாதன தர்மம் முழுவதையும் ஒழிக்க வேண்டும் என்ற அழைப்பில் இருந்து வேறுபட்டது எப்படி? ஈ.வே. ராமசாமியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதாகச் சொல்லி, சனாதன தர்மம் செய்பவர்களைக் கத்தியால் குத்திக் கொல்லுமாறு தி.மு.க உதயநிதி ஸ்டாலின் பரிந்துரைக்கிறாரா?
ஏப்ரல் 28, 2023-ல், உச்ச நீதிமன்றம், வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் குறித்து சுமோட்டோ மூலம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், குற்றவாளிகளுக்கு எதிராக யாரேனும் புகார் அளிக்க விரும்பவில்லை என்றாலும் வழக்கு தொடர மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, வெறுப்பு பேச்சுக்காக ஐ.பி.சி 153A, 153B, 29sA மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் ஆகும். ஆனால், தி.மு.க உதயநிதி ஸ்டாலினின் இந்த வெறுப்புப் பேச்சுக்கு தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
நம் நாட்டில், குலதெய்வங்கள், காவல் தெய்வங்கள், சைவர்கள், வைணவர்கள், சக்திகள், ஸ்மார்த்தர்கள் என்று வழிபடுபவர்கள், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையால் தமிழ்நாடு முழுவதும் மிகவும் வேதனையடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, காவல் துறை இந்த விஷயத்தில் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை.
செப்டம்பர் 4, 2023-ல் காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் பொதுக்கூட்டத்தில் காவல் துறை இல்லையென்றால் காஞ்சி மடத்தை இடிப்போம் என்று கூறினார். இவை சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்விளைவாகவே கருதப்படுகின்றன.
உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே தமிழகத்தில் அமைதியை குலைத்துள்ளார். இந்த நாட்டின் எல்லா குடிமகனையும் ஒரே மாதிரி கையாளப்பட வேண்டும், ஆனால், அவர் தமிழக முதல்வரின் மகன் என்ற காரணத்தால் நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையால் பாதுகாக்கப்படுகிறார்.
முதலமைச்சர் அவர்கள், அவர் மீதான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கவும் மாநில டி.ஜி.பி-க்கு தயவுசெய்து அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.