தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 27-ம் தேதி அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். ராமேஸ்வரம், மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டு முடித்தார்.
நேற்று (ஆகஸ்ட் 15) கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணத்தை தொடங்கினார். சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி மண்டபத்திற்கு சென்று
அங்குள்ள பாரத மாத முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காந்தி படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.
விளவங்கோட்டில் தேசியக் கொடி ஏற்றிய அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கினார். கன்னியாகுமரியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். கடந்த 17 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு வந்த அண்ணாமலை நேற்று குழித்துறை சந்திப்பில் நடைபயணத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து தனது முதற்கட்ட நடைபயணத்தை அண்ணாமலை நிறைவு செய்தார்.
குழித்துறையில் பேசிய அண்ணாமலை, மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்கள், அதன் பயனாளிகள் குறித்தும் பேசினார். நாளை மறு நாள் (ஆகஸ்ட் 17) காலை பத்மநாபபுரம் தொகுதி சாமியார் மடத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”