BJP Annamalai condemns Trichy Surya Siva arrest: தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளருமான சூர்யாசிவா திருச்சி போலீசாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா தன் தந்தை மீதுள்ள கருத்து வேறுபாட்டால் தி.மு.க.,வில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில சிறுபான்மை பிரிவு செயலாளராக கடந்த வாரம் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 11 ம் தேதியன்று, உளுந்தூர் பேட்டை அருகே ஒரு தனியார் ஆம்னி பேருந்து சூர்யாவின் கார் மீது மோதி விட்டதாம். அதனால் சேதமடைந்துள்ள தனது காருக்கு அந்த ஆம்னி பேருந்து உரிய இழப்பீடு தரவேண்டும் என்று சூர்யா தகராறு செய்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் உடன் பா.ஜ.க தலைவர்கள் சந்திப்பு
அந்த இடத்தில் இழப்பீடு எதுவும் தரப்படாத நிலையில் இதுகுறித்து பிறகு பேசிக் கொள்ளலாம் என்று பேருந்து உரிமையாளர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு ஒத்து வராத சூர்யா இழப்பீடு தரவில்லை என்பதால் அந்த ஆம்னி பேருந்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துச் சென்று விட்டாராம்.
தன் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ஜ.க பிரமுகர் சூர்யா தனியார் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டுவதாக பேருந்தின் உரிமையாளர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கண்டோன்மெண்ட் போலீசார் சூர்யாவை இன்று கைது செய்தனர்.
தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க யார் எவர் என்று விசாரிக்காமல் பல புதிய முகங்களை கட்சியில் இணைப்பது மட்டுமின்றி மாநில அளவிலான பதவிகளையும் கொடுத்து வருகின்றது.
அந்த வகையில் தான் திருச்சி சிவா எம்.பி என் மகன் சூர்யா சிவா-வையும் பாஜகவில் இணைதது மாநிலப் பொறுப்பை கொடுத்தது. ஏற்கனவே சென்னையில் குடித்து விட்டு பீர் பாட்டிலால் நண்பர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்யா சிவாக்கு பா.ஜ.க மாநில பொறுப்பு கொடுத்ததை திருச்சி பா.ஜ.க.,வினரே விமர்சித்து வந்த நிலையில், மீண்டும் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சூர்யா சிவா இன்று கைதாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதனிடையே இந்த கைதுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது திமுக அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல.
சகோதரர் சூர்யா சிவா அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது பாஜக. பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று திரு. மு.க.ஸ்டாலின் மற்றும் செல்வி மம்தா ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! என்று பதிவிட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.