பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத அரசால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டி ராஜ்பவனில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் ஊழல் நடந்து இருப்பதாகவும், பிரதமர் மோடி வருகையின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று 2 மனுக்கள் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை: தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு வந்த பிரதமருக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை. நேரு விளையாட்டரங்கில் பிரதமர் பங்கேற்ற விழாவில் மெட்டல் டிடெக்டர் வேலை செய்யவில்லை. பிரதமருக்கே பாதுகாப்பு வழங்காத இந்த அரசு சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கும்.
பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய பாதுகாப்பு படையினர் மாநில அரசிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கு யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் குண்டு வெடித்த சில மணி நேரங்களில் இது தீவிரவாத தாக்குதல் என கர்நாடக மாநில டிஜிபி தெரிவிக்கிறார். ஆனால் தமிழகத்தில் கோவையில் நடந்த சம்பவத்தை நம் அரசு இன்னமும் கார் வெடிப்பு சம்பவம் என்றே கூறி வருகிறது. குண்டுவெடிப்பு என சொல்வதற்கு கூட தைரியம் இல்லை.
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் ஆளுநர் மீது தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் 6 மாதமாக அரசு ஆணை பிறப்பிக்காதது ஏன்? அதனால்தான் இன்று வரை ஆன்லைன் சூதாட்டம் தொடருகிறது. ஆளுநர் மீது பழிபோட்டு, மக்களை திமுக அரசு ஏமாற்றப் பார்க்கிறது.
மேலும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் 69 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு மத்திய அரசிடம் கணக்கு காட்டி இருக்கிறது. நாங்கள் 3 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில் வெளியே குழாய் பொருத்தப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் தண்ணீர் வரும் குழாயே இல்லை என்பதை பார்த்தோம். இந்த திட்டத்தில் பல நூறு கோடி ஊழல் நடந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கவும் கவர்னரிடம் கேட்டுக் கொண்டோம் என்று அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“