பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதியில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தேனி பங்களாமேடு பகுதியில்
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 13) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்த நாட்டை வளமாக்க பா.ஜ.கவுக்கு 400 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை. அதில் டிடிவி தினகரனும் இருக்க வேண்டும். ராமரை போல 16 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக் கொண்டு தினகரன் இந்த தேர்தலில் களம் காண்கிறார். ஜெயலலிதாவைப் போல டி.டி.வி.தினகரன் அரசியல் செய்கிறார்.
கான்ட்ராக்டர்களிடம் அ.தி.மு.க.வை இ.பி.எஸ் தாரை வார்த்து விட்டார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருமே பெரும் கான்ட்ராக்டர்கள். 2024 தேர்தலுக்கு பிறகு உண்மையான தலைவர்கள் கையில் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் இருக்கும். தேர்தலுக்கு பிறகு இ.பி.எஸ் தலைமையிலான அதிமுக இருக்காது. அ.தி.மு.க தொண்டர்கள் டி.டி.வி தினகரனுடன் இணைவார்கள் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவை காக்க வாருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவரிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற தான் நாங்கள் முயற்சிக்கிறோம். தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் ஒன்றுதான். தொண்டர்கள் வேறு வேறாக இருக்கலாம். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஒன்று தான் என்றும் அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“