ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வாஜ்பாய் திடலில் இருந்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 28) பாத யாத்திரையைத் தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 4 கட்டங்களாக 168 நாட்கள் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் அண்ணாமலை பாத யாத்திரை தொடங்குகிறார். 2 நாள் பயணமாக தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும் தமிழக மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும் 'என் மண் என் மக்கள்' என்ற பாத யாத்திரையை அண்ணாமலை தொடங்குகிறார்.
இதனையொட்டி வாஜ்பாய் திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பா.ஜ.க தொண்டர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். அமித்ஷா வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலை பாத யாத்திரை செல்ல பிரத்யேக வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. அமித்ஷா வருகையையொட்டி மண்டபம் முகாமில் வாகன அணிவகுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அண்ணாமலை பாத யாத்திரை தொடங்க விழாவில் பங்கேற்க தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க உள்டப பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நடைபயணத் தொடங்க விழாவில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்வில்லை. ஜெயலலிதா குறித்துப் பேச்சு, ஓ.பி.எஸ், டி.டி.விக்கு அழைப்பு உள்ளிட்ட காரணங்களால் இ.பி.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்தாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“