Advertisment

கல்லக்குடி கண்ட கருணாநிதி அல்ல; கண்ணதாசன் என்று தான் சொல்ல வேண்டும்: அண்ணாமலை பேச்சு

1953இல் ஜூலை நடைபெற்ற போராட்டத்தில் கருணாநிதி ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தினார். ஆனால் கண்ணதாசன் பிறகு அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி 18 மாதம் சிறை தண்டனை பெற்றார்- திருச்சி லால்குடியில் அண்ணாமலை பேச்சு

author-image
WebDesk
New Update
Trichy Annama.jpg

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் - என் மக்கள் நான்காம் கட்ட நடை பயணமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றார். இன்று காலை அரியலூர் மாவட்டத்தில் நடை பயணத்தை திருச்சி லால்குடி சட்டமன்றத் தொகுதியில் தொடங்கினார். பின்னர் லால்குடி ரவுண்டானாவில் பேசிய அண்ணாமலை, "லால்குடி ஏழு சப்த ரிஷிகள் ஈஸ்வரனை வழிபட்ட கோயில் அமைந்த ஊர். சனாதான தர்மத்தை பேணிக்காப்பது இங்கே சரியாக பொருந்தும்.

 

40 செங்கல் சூளைகள் லால்குடியில் உள்ளது. உழைப்பாளிகளால் உருவாக்கப்படும் செங்கல்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடுகளில் லால்குடி செங்கல் இருக்கும். கடந்த ஜூலை மாதத்தில் லால்குடியில் செங்கல் சூளைகளில் வேலை பார்த்த ஆறு கொத்தடிமைகளை மீட்டதாக செய்தி படித்தேன். ஆனால், இங்கே இரண்டு அமைச்சர்களும் லால்குடியை சொந்த ஊர்களாக கொண்டவர்கள். ஒருவர் நேரு மற்றொருவர் மகேஸ். நேரு தற்போதே தனது வேலையை தொடங்கி விட்டார். அவரது மகனை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குவதற்கு பணிகளை ஜரூராக செய்து கொண்டிருக்கிறார். மூன்றாம் தலைமுறையாக குடும்ப ஆட்சியில் வந்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

Advertisment

திமுக என்றாலே குடும்ப ஆட்சி. அவர்களது குடும்பம் அவர்கள் மட்டுமே 1967 முதல் இதைதான் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நம் யாத்திரையின் நோக்கம் ஒவ்வொரு படித்த இளைஞர்களுக்கும் நேரடியாக வேலைவாய்ப்பு, வேலைக்கேற்ற ஊதியம் இதனை உருவாக்குவதுதான் பிரதான நோக்கம். மேலும், கல்லக்குடி பேரூராட்சி தலைவராக இருந்த பால்துரை அப்பகுதி மக்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு லால்குடி டால்மியா சிமெண்ட் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ளார். பணத்தை கொடுத்தவர்கள் கேட்ட பொழுது நேரடியாக சிமெண்ட் நிறுவனத்தில் உள்ளே புகுந்து பாதுகாவலர்களை அடித்து உள்ளே இருக்கக்கூடிய கணிப்பொறிகள் எல்லாம் உடைத்து எறிந்தவர் தான் இந்த திமுக காரர் பால்துரை.

திமுக என்றாலே ஓசி டீ, பிரியாணி சாப்பிட்டு பில் கொடுக்காமல் செல்வது, பியூட்டி பார்லரில் தகராறு செய்வது, சிமெண்ட் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுவது இதை அனைத்தும் செய்வதுதான். 

உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை மாமூல், மாமூல் திமுகவில் மட்டும் தான். சென்னைக்கு வந்தால் அமைச்சர்கள் மாமூல், உள்ளூருக்கு வந்தால் உள்ளூர் திமுக பிரமுகர்கள் மாமூல். 

அமைச்சர் கீதாஜீவன் இடம் முட்டை எப்படி கெட்டுப் போனது என கேட்ட பொழுது முட்டையில் கருப்பு கலர் சீல் வைத்தது வைத்திருந்தோம். மழை காரணமாக முட்டையில் கருப்பு கலர் கரைந்து கலந்து முட்டை கெட்டு விட்டதாக பதில் அளிக்கிறார். இந்தியாவிலேயே மோசமான ஆட்சி திமுக ஆட்சி எதை எடுத்தாலும் மாமூல் உச்சத்தில் உள்ளது. 

BJP Annamalai2.jpg

திமுக ஆட்சியில் தான் கல்லக்குடி கொண்ட கருணாநிதி என திமுகவினர் அனைவரும் கருணாநிதி அய்யாவை சொல்லுவார்கள். கண்ணதாசனின் வனவாசத்தில் ஒரு உண்மையை எழுதியுள்ளார். டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றுவதற்கு கல்லக்குடியில் போராட்டம் நடைபெற்றது. அதில் மூன்று குழுக்கள் கலந்து கொண்டது. ஒரு குழுவில் கருணாநிதி கலந்து கொண்டார். மூன்றாவது குழுவில் கண்ணதாசன் கலந்து கொண்டார். 1953இல் ஜூலை நடைபெற்ற போராட்டத்தில் கருணாநிதி ரயில் வராத  தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தினார். 

போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். ஒரு மணி நேரம் கழித்து கண்ணதாசன் அப்ப பகுதிக்கு வந்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தினார். போலீசார் அவரை அடித்து அடித்து உதைத்து ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்தில் கொண்டு சென்றனர். அதன் பின்பு கருணாநிதிக்கு மூன்று மாத சிறை தண்டனையும் கண்ணதாசனுக்கு 18 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் கல்லக்குடி கண்ட கண்ணதாசன் என்று தான் சொல்ல வேண்டும், பொய்யாக பேசி அரசியலில் வரலாற்றை மாற்றி மாற்றி பேசுவது திமுகவினர் தான்.  

BJP Annamalai1.jpg

70 ஆண்டுகால ஆட்சியில் இவர்கள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். திருவண்ணாமலையில் 125 நாட்கள் போராடிய விவசாயிகள் ஏழு பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்காக நாளை பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அவர்களை விடுவிக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும். அவர்கள் கேட்பது நியாயமான போராட்டம் தண்ணீர் உள்ள விவசாயப் பகுதிகளில் 3600 ஏக்கர் விலை நிலங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்பது தான் அவருடைய போராட்டம். 

இதுகுறித்து அமைச்சர் எவ வேலுவிடம் கேட்ட பொழுது தொழிற்சாலைகளை வானத்தில போய்யா கட்ட முடியும் என பதிலளிக்கிறார். விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை தகவல் அனைத்தும் செய்தித்தாளில் பார்த்ததாக குறிப்பிடுகிறார். திமுகவின் 501 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். முதல்வர் முப்பது மாதத்தில் 99% நிறைவேற்றிவிட்டேன் என பொய்யாக பேசி வருகிறார். 20 வாக்குறுதிகளை முழுமையாக கூட நிறைவேற்றவில்லை. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வந்து விட்டனர். திமுக என்ற தீய சக்தியை இந்த தேர்தலில் அடித்து விரட்ட வேண்டும்.

திமுக கூறுவது திராவிட மாடல் அரசு இல்லை அது டாஸ்மாக் மாடல் அரசு. டிஆர் பாலு, ஜெகத்ரட்சகன் இரண்டு அமைச்சர்களின் வயிற்று பிழப்பிற்காக டாஸ்மாக் மூலம் வருவாயை பெருக்கிக் கொடுக்கிறது. உழைப்பவர்களின் காசு அரசுக்கு சேரவில்லை. அமைச்சர்களுக்குத்தான் செல்கிறது அவர்களின் சாராய ஆலையின் மூலமாக என தெரிவித்தார்.  பாஜக ஆட்சியில் வந்தவுடன் தமிழகத்தில் நான்கில் மூன்று பங்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும். கள்ளுக்கடைகள் கண்டிப்பாக திறக்கப்படும்" என்றார். 

 

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment