கோவையில் தமிழ்நாடு பாஜக விவசாய பிரிவு சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை ஒயிலாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார்.
இதனை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட அவர், " சூலூர் பேரூராட்சியில் தமிழ்நாடு பாஜக விவசாய பிரிவு சார்பாக ‘நம்ம ஊரு பொங்கல்’ விழா நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிராமிய கலைஞர்களையும், கிராமிய பாடல்களையும் முன்னிலைப் படுத்துவது நிகழ்ச்சியுண் நோக்கமாக இருந்தது. கும்மிப்பாட்டு, கரகாட்டம் , ஒயிலாட்டம் இன்றைய நிகழ்ச்சியில் முக்கியத்தும் பெற்றது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, கோவை மாவட்டத்தில் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா ஒன்றில் பங்கேற்றிருந்த பழங்குடியின மக்களுடன் அண்ணாமலை நடனமாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை டெல்லியில் முரளிதரராவ் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து, அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இதுநாள் வரையில், எளிமையான அரசியல் அணுகுமுறையை அண்ணாமலை கையாண்டு வருகிறார். திராவிட அரசியல் தலைவர்களைப் போல் மேடை பேச்சு நுட்பம் இல்லை என்றாலும், தொண்டர்களுடன் இயல்பாக நடந்து கொள்வதன் மூலம் அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறார் .