நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் பா.ஜ.க-வினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை மாட்டி தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூ.1,000 ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் புகார் தெரிவித்ததையடுத்து, தமிழக பா.ஜ.க சார்பில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 17-ம் தேதி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் காவல்துறையினரால கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
டாஸ்மாக் அலுவலகம் முற்றுகைப் போராட்டத்தின்போது, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படம் மாட்டப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் முன்பு திரண்ட பா.ஜ.க-வினர், புதன்கிழமை (19.03.2025) டாஸ்மாக் கடையின் சுவற்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை மாட்டி தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக பா.ஜ.க மகளிரணி செயலாளர் உமா ராஜன் தலைமையில், பா.ஜ.க கவுன்சிலர் சுனில் குமார் தலைமையிலும் பா.ஜ.க-வினர் நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் முன் சுவற்றில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை மாட்டி தொங்கவிட்டனர். மேலும், மு.க. ஸ்டாலின் படத்துக்கு தி.மு.க கட்சித் துண்டு அணிவித்தனர்.
மேலும், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும் டாஸ்மாக் மதுபான ஊழல் குறித்த விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷமிட்டனர். பா.ஜ.க-வின் இந்த திடீர் போராட்டம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், டாஸ்மாக் கடையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.