‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ பாஜக அண்ணாமலை சர்ச்சை பேச்சு

பாஜக வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு… அது கர்நாடகா முகம்’ என்று கருர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு… அது கர்நாடகா முகம்’ என்று கருர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று கூறி திமுக எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர் பாஜகவின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் மொச்சனூர் ஆர்.இளங்கோ போட்டியிடுகிறார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அண்ணாமலை தேர்தல் பிரசாரத்தின்போது, “எனக்கு இன்னொரு முகம் இருக்கு… அது கர்நாடகா முகம். அதை இங்கே காட்ட வெண்டாம் என்று நினைக்கிறேன்” என்று கூறியதோடு திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் அண்ணாமலை பேசியிருப்பதாவது: பணம் கொடுத்து செய்தித்தாளில் அண்ணாமலை அரவக்குறிச்சியில் தோல்வியடைவார் என்று போட்டுக்கோடா… என்ன வேண்டுமானலும் போட்டுக்கோடா… தனிமனித தாக்குதல் எதற்கு பண்ற? பாரத பிரதமர் மீது எதற்கு தனிமனித தாக்குதல் பண்ற? அவர் ஏதாவது தப்பு பண்ணாரா? திமுகவுக்கு ஏதாவது தப்பு பண்ணாரா? ஸ்டாலினுக்கு ஏதாவது தப்பு பண்ணாறா? அவர் என்ன ஊழல்வாதியா இருந்தாரா? அவர் மீது ஒரு ரூபாய் ஊழல் சொல்லு? நான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சிஷ்யன் என்று சொல்வதில் எனக்கு பெருமை. அது உனக்கு பிரச்னையா? பிரச்னையா இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். என்னை எலக்‌ஷன்ல் தோற்கடிப்பியா? தோற்கடிச்சுட்டு போய்க்கோ… ஆள் வச்சு பூத் செட் பண்ணுவியா செட் பண்ணிட்டு போய்க்கோ… புர்க்கா போட்டு கள்ள ஓட்டு போடுவியா போட்டுக்கோ… அதற்கெல்லாம் நான் பயப்படுற ஆள் நான் கிடையாதுங்க… உங்க ஊருக்கு வந்து சொல்லிட்டு போறது… என்ன நடந்தாலும் இந்த அண்ணாமலை ஏப்ரல் 6ம் தேதி வரை இந்த அண்ணாமலை இங்கே நிப்பான். அதில் ஒரு மாற்றமும் கிடையாது. ஒரு இன்ஸ் பின்னாடி போகாது. என்ன வேண்டுமானாலும் தாக்குதல் நடத்திக்கோ…. நீ கட்சிக்காரன அடிச்ச இதுவரைக்கு 7 எஃப்.ஐ.ஆர் பதிவாகியிருக்கு. யாராவது போஸ்டர் ஒட்டினால், நைட்டு போஸ்டரை கிழிக்கிறது. கட்சிக்காரங்களை கை வைக்கிறது. கனிமொழி வந்துவிட்டு போன அன்று 2 கட்சிக்காரங்க மண்டைய ஒடைச்சிருக்கீங்க. இந்த அண்ணாமலை வன்முறையை ஆரம்பித்து திரும்ப நான் கை வைத்துவிட்டால்… டேய்! உன்ன மாதிரி நான் எவ்வளவு பேரை தூக்கி போட்டு மிதிச்சிருப்பேன். அரசியலுக்கு வந்த பிறகு, அமைதியா இருக்கேன். செந்தில் பாலாஜியை எல்லாம் தூக்கிபோட்டு மிதித்தேன் என்றால் பல்லு எல்லாம் வெளியெ வந்துவிடும். அது மாதிரி எவ்வளவு பெரிய ஃபிராடு எல்லாம் பார்த்துவிட்டு வந்திருப்பேன் நான். நீங்கல்லாம் ஒரு ஆளுக… நீங்கல்லாம் ஒரு இது. உங்களுக்கு பயந்து நான் கை வைத்தால், நீ வயலன்ஸ் பண்ணி அண்ணாமலை வயலன்ஸ் பண்றார்னு மாத்துவியாம். அதனால், இங்கே இருக்கிற திமுககாரனுக்கு எச்சரிக்கை வைத்துவிட்டு போகிறேன். நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக கிடையாது. அஹிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம். அந்த முகத்தை இங்கே காட்ட வேண்டாம்னும் நினைக்கிறேன். வந்து வீடியோ எடு.. எடுத்துட்டுப்போ… எலக்‌ஷன் கமிஷன் கிட்ட கொடுப்பியா? இதற்கெல்லாம் நான் பயப்படுகிற ஆளா நான். நியாயப்படி தர்மப்படி என்ன இருக்கோ பண்ணு. அதனால், ஊரு மக்கள் இவ்வளவு தூரம் தனி ஆளாக சண்டை போடுவது உங்களுக்காக. தயவு செய்து நீங்கள் அதை புரிந்துகொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த சர்ச்சை பேச்சு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அண்ணாமலையின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், “அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனக்கு இன்னொரு முகம் இருக்குனு சொல்லுறாரு… செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு தம்பி.. திமுக உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bjp candidate former ips officer annamalai controversy speech against dmk sendil balaji dmk mp kanimozhi condemned

Next Story
யோகியின் வருகை; கடைகள் மீது கல்வீச்சு; பதற்றமான கோவை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com